ஊழலுக்கு எதிரான நிலைப்பாட்டை மக்கள் ஆதரிப்பார்கள் என்று நம்புகிறேன் என ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தெரிவித்தார்.
சகாயம் அரசியல் பேரவை கூட்டணியில் உள்ள தமிழ்நாடு இளைஞர் கட்சியின் ஆவடி வேட்பாளரான எம்.பாலசுப்ரமணியனை ஆதரித்து சகாயம் நேற்று முன்தினம் ஆவடியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது, ஆவடி புதிய ராணுவ சாலை, காய்கறி மார்க்கெட், ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 3 கி.மீ. தூரம் நடந்து சென்று வாக்கு சேகரித்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் சகாயம் தெரிவித்ததாவது:
சகாயம் அரசியல் பேரவை மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை மக்கள் சிறப்பாக வரவேற்று வருகின்றனர். தமிழகத்தில் ஊழல் நிர்வாகம் அகற்றப்பட வேண்டும். எந்த சூழ்நிலையிலும் இந்த நாட்டை மத அடிப்படையில் வழி நடத்துகிற மதவாத சக்திகளை வேரூன்ற அனுமதிக்கக் கூடாது என்ற அடிப்படையில் நாங்கள் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறோம். ஊழலுக்கு எதிரான நிலைப்பாட்டை மக்கள் ஆதரிப்பார்கள் என நம்புகிறேன்.
எங்கள் இயக்கத்தின் வழியாக இளைஞர்கள் சமூகப் பணிகளை மேற்கொண்டு வந்த இடங்கள் மற்றும் படிப்பறிவு, விழிப்புணர்வு உள்ள மக்கள் நிறைந்திருக்கக் கூடிய பகுதிகளில் எங்கள் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளோம்.
எங்கள் வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர்கள் நேர்மை மிகுந்தவர்களாக மக்கள் எளிதில் அணுகக் கூடியவர்களாக, மக்களின் மேம்பாட்டுக்கு அர்ப்பணிப்போடு பாடுபடக் கூடியவர்களாக இருப்பார்கள்; முன்மாதிரி சட்டப்பேரவை உறுப்பினர்களாக செயல்படுவார்கள்.
எல்லா பணிகளையும், நம்பிக்கையோடுதான் தொடங்க வேண்டும். அரசியலில் ஊழலுக்கான காலம் உண்டு என்பது போல் நேர்மைக்கான காலம் இருக்கிறது என நம்புகிறோம்.
எதிர்காலத்தில், சமூகத்தை நேசிப்பது எங்களுடைய லட்சியம் என்று கொண்டிருக்கக் கூடிய தலைமையை மக்கள் விரும்புவார்கள் என நம்புகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.