அதிமுக ஆட்சி பெண்களுக்கு பாதுகாப்பானது என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சி அலுவலகம் அருகே அதிமுகவின் ஆவடி மற்றும் அம்பத்தூர் தொகுதிகளின் வேட்பாளர்களான அமைச்சர் பாண்டியராஜன், அலெக்சாண்டர் ஆகியோரை ஆதரித்து நேற்று அன்புமணி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, அவர் பேசியதாவது:
ஆவடி தொகுதியின் அதிமுக வேட்பாளரான க.பாண்டியராஜன் தமிழகத்தின் நாகரிகமான அரசியல்வாதி. தொலை நோக்கு பார்வை கொண்ட பாண்டியராஜன் மற்றும் அம்பத்தூர் அதிமுக வேட்பாளர் அலெக்சாண்டர் ஆகியோர் மீண்டும் வெற்றி பெற்றால், தமிழகத்தில் மீண்டும் ஒரு விவசாயி முதல்வராக வருவார்.
அதிமுக ஆட்சி பெண்களுக்கு பாதுகாப்பானது. அதிமுகவின் ஆட்சி மக்களாட்சி; இங்கு யாரும் முதல்வராகலாம். திமுகஆட்சி மன்னராட்சி; இது வாரிசு ஆட்சி. இந்த ஆட்சியில் அப்பா, பிள்ளை, பேரன்கள்தான் முதல்வராக வர முடியும். ஸ்டாலின் மக்களையும், தன் கட்சிக்காரர்களையும் நம்பவில்லை. மாறாக, பிஹாரிலிருந்து வந்துள்ள பிரசாந்த் கிஷோரை நம்புகிறார்.
கரோனா பேரிடர் காலம் என்பதால் மக்கள் வேலை இழப்பு ஏற்பட்டு பொருளாதார ரீதியாக, மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அதிமுகவின் திட்டங்கள் யாவும் அவசியமான, அத்தியாவசியமான திட்டங்களாகும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர், அன்புமணி பூந்தமல்லி (தனி) தொகுதி பாமக வேட்பாளர் எஸ்.எக்ஸ்.ராஜமன்னாரை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.