தஞ்சாவூர் அருகே செங்கிப்பட்டியில், திருவையாறு தொகுதி பாஜக வேட்பாளர் பூண்டி எஸ்.வெங்கடேசனை ஆதரித்து நேற்று தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி பேசியது:
இந்தத் தேர்தல் திமுக- காங்கிரஸ் கூட்டணிக்கும், அதிமுக- பாஜக கூட்டணிக்கும் இடையே நடைபெறும் தேர்தல் மட்டுமல்ல. தமிழ்க் கடவுள் முருகனுக்கும், அவரை எதிர்ப்பவர்களுக்கும் இடையே நடைபெறும் தேர்தல். அவர்களைத் தோற்கடிக்க இதுதான் சரியான தருணம்.
தமிழகத்துக்கு பல்வேறு திட்டங்களுக்காக ரூ.6.10 லட்சம் கோடியை பிரதமர் மோடி ஒதுக்கீடு செய்துள்ளார்.
எனவே, மோடிதான் தமிழகத்துக்கு உண்மையான நண்பர். விவசாய கடன்களைத் தள்ளுபடி செய்த தமிழக முதல்வர் பழனிசாமியும் நம்முடைய நண்பர்தான். தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை தடை செய்த காங்கிரஸ்தான் நம்முடைய எதிரி.
திமுகவுக்கு வாக்களித்தால் குடும்ப ஆட்சிக்கும், நில அபகரிப்புக்கும், கட்டப் பஞ்சாயத்துக்கும் வாய்ப்பளிக்கும் விதமாக அமைந்துவிடும். எனவே, இவற்றுக்கு நேர் எதிராக இருக்கக்கூடிய, நல்லாட்சி தரக்கூடிய பாஜக-அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.