தமிழகம்

அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் நடத்தை விதிகளுக்கு உட்பட்டுள்ளனவா? - தேர்தல் ஆணையம் ஆராய உயர் நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் நடத்தை விதிகளுக்கு உட்பட்டு உள்ளனவா என்பதை ஆராய்ந்து தேர்தல் முடிவுகள் வெளியான 2 மாதங்களில் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக கோயம்புத்தூர் ‘கன்ஸ்யூமர் காஸ்’ என்ற அமைப்பின் சார்பில் வி.கதிர்மதியோன் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘தேர்தல் நேரங்களில் அரசியல் கட்சிகள் வாக்காளர்களைக் கவருவதற்காக தங்களது இஷ்டம்போல வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றன.இத்தேர்தல் அறிக்கைகள், நடத்தை விதிகளுக்கு உட்பட்டு உள்ளனவா என்பதை ஆய்வு செய்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடந்த 2013-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் மீது தேர்தல் ஆணையம் காலம் கடந்து உத்தரவுகளைப் பிறப்பித்தது. எனவே அதுபோல காலதாமதமின்றி தற்போது அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் நடத்தை விதிகளுக்கு உட்பட்டு உள்ளனவா என்பது குறித்து ஆராய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும், என அதில் கோரியிருந்தார்.

இவ்வழக்கு விசாரணை நேற்று தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘‘மனுதாரரின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் பரிசீலித்து, தேர்தல் முடிவுகள் வெளியான 2 மாதங்களில் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும், என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளனர்.

SCROLL FOR NEXT