அதிமுக மீண்டும் வெற்றி பெற்றால் தேர்தல் அறிக்கையில் சொன்னதை அப்படியே நிறைவேற்றுவோம்; நானே வாஷிங் மெஷினை உங்கள் வீடுகளுக்கு கொண்டு வந்து தருவேன் எனறு சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
அவர் நேற்று குமராட்சி கிழக்குஒன்றியத்திற்கு உட்பட்ட தவர்தாம்பட்டு,புதுப்பூலாமேடு, சிவாயம், காட்டுக்கூடலூர், என்.பூலாமேடு, நாஞ்சலூர், சி.வக்காரமாரி, இளநாங்கூர், கூத்தன்கோயில், அம்மன்கோயில், பொய்யாப் பிள்ளை சாவடி, பொன்னாங்கன்னிமேடு, துரைப்பாடி, கடவாச்சேரி ஆகிய பகுதிகளில் கூட்டணிக் கட்சியினருடன் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.
சிவாயம் மண்டபம் கிராமத்தில் வாக்கு சேகரித்து பேசிய பாண்டியன், “அதிமுக அரசு பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை சிதம்பரம் சட்டமன்ற தொகுதியில் செயல்படுத்தியுள்ளது. குறிப்பாக குடிமராமத்து திட்டத்தின் கீழ் கிராமப் பகுதிகளில் உள்ள ஏரி, குளங்கள் தூர் வாரப்பட்டு நீர் நிலைகள் பாதுகாக்கப்பட்டதால் இன்றைக்கு விவசாய பயன்பாட்டிற்கு உறுதுணையாக உள்ளது.
கிராம பகுதி மருத்துவத் தேவைகளை பூர்த்தி செய்திட 7 இடங்களில் மினி கிளினிக் திட்டம் மூலம் மருத்துவமனைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ. 1,500 உள்பட அதிமுக தேர்தல் அறிக்கையில் கொடுத்துள்ள வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவோம். வாஷிங் மிஷின் நானே கொண்டு வந்து உங்களில் வீடுகளில் தருவேன்” என்றார்.
அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளர் இளங்கோவன், குமராட்சி கிழக்கு ஒன்றிய செயலாளர் சுந்தரமூர்த்தி, பாமக மாவட்ட செயலாளர் சசிக்குமார் மற்றும் அதிமுக, கூட்டணிக்கட்சி நிர்வாகிகள் பலர் உடன் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.