அதிமுக கூட்டணியில் போட்டியி டும் மயிலம் தொகுதி பாமக வேட்பாளர் சிவகுமார், செஞ்சி தொகுதி பாமக வேட்பாளர் ராஜேந்திரனை ஆதரித்து பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று மாலை அத்தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியது:
மயிலம் தொகுதியில் அரசு வேளாண் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் குடிசைகள் நிறைந்த மாவட்டம் விழுப்புரம் மாவட்டம். இங்குதான் ஏழ்மையானவர்கள் அதிக அளவில் வசிக்கிறார்கள். வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தி தாய்மார்கள்தான். தாய்மார்கள் இன்னலைப் போக்கும் தேர்தல் அறிக்கையை அதிமுக வெளியிட்டுள்ளது. அதிமுக தேர்தல் அறிக்கை மக்களுக்கு அள்ளி கொடுக்கும் அமுதசுரபி.
திண்டிவனம் -கிருஷ்ணகிரி சாலை அகலப்படுத்தும் பணி கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இச்சாலைப்பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி பாமக போராட்டம் நடத்தியது. செஞ்சி நீதிமன்றம் இச்சாலை போக்குவரத்துக்கு தகுதியற்றது என தடை விதித்தது. பின்னர் உயர்நீதிமன்றம் இத்தடையாணையை ரத்து செய்தது. 6 மாதத்திற்குள் இப்பணியை முடிக்காவிட்டால் பாமக மீண்டும் போராட்டம் நடத்தும். இப்பகுதியில் அரசு கலைக்கல்லூரி அமைக்கப்படும். சங்கராபரணி ஆற்றில் தடுப்பணை கட்டப்படும். செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விற்பனை செய்யும் விளைபொருட்களுக்கு அன்றே பட்டுவடா செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். எனவே பாமக வேட்பாளர்களை ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.