திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாமக சார்பில் திலகபாமா போட்டியிடுகிறார். இவர் தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
செம்பட்டி அருகேயுள்ள கூத்தாம்பட்டி, வண்ணம்பட்டி கிராமங்களில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அங்கு ஒரு நிகழ்ச்சியில் தப்பு அடித்துக் கொண்டிருந்தவர்களிடம் இருந்த தப்பை வாங்கி அவர்களுடன் சேர்ந்து தப்பு அடித்து வாக்காளர்களை கவர்ந்தார். ஏற்கெனவே பழக்கப்பட்டவர் போல் தப்பு அடித்ததைக் கண்டு அப்பகுதி மக்கள் ஆச்சரியப்பட்டனர்.
இதையடுத்து கூத்தாம்பட்டி கிராமத்தில் பாமக வேட்பாளர் திலகபாமா பிரச்சாரம் மேற் கொண்டார். அப்போது, இவரை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிடும் திமுக மாநில துணைப்பொதுச்செயலாளர் ஐ.பெரிய சாமியை தனிநபர் விமர்சனம் செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு வீரக்கல் ஊராட்சித் துணைத் தலைவராக உள்ள காங்கேயன் என்பவர், தனிநபர் விமர்சனம் செய்யக்கூடாது எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் திமுக ஆதரவாளர்கள், பாமகவினருக்கு இடையே வாக்கு வாதம் முற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதைக் கண்டித்து பாமகவினர் வேட்பாளர் திலகபாமா தலைமையில் வத்தலகுண்டு-செம்பட்டி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். பிரச்சாரத்தின்போது வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஊராட்சித் துணைத் தலைவரை கைது செய்ய வேண்டும் எனக் கோஷமிட்டனர். அங்கு வந்த போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர். தொடர்ந்து வேட்பாளர் திலகபாமா பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.