தமிழகம்

பெரும் சவாலாக விளங்கும் அதிமுக - வாக்குகளைப் பிரிக்கும் சிறிய கட்சிகள்: நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸின்  ‘கை' ஓங்குமா?

அ.அருள்தாசன்

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸுக்கு பெரும் சவாலாக அதிமுக விளங்குகிறது. அதிமுகவுக்கு சவாலாக இருக்கிறது அமமுக. பாளையங்கோட்டை, நாங்குநேரி தாலுகாக்களுக்கு உட்பட்ட பகுதிகளைக் கொண்டது நாங்குநேரி தொகுதி. மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்திலுள்ள களக்காடு ஒன்றியம் செழுமையான விவசாய நிலப்பரப்பை கொண்டது. களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், வடக்கு பச்சையாறு, கொடுமுடியாறு அணைக்கட்டுகள் இத்தொகுதியில் உள்ளன. நாட்டிலேயே ராணுவ தகவல் தொடர்புக்கான மிகப்பெரிய கடற்படை தளமான ஐஎன்எஸ் கட்ட பொம்மன் கடற்படைதளம், நாட்டிலேயே முதன்முதலாக தொடங்கப்பட்ட நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலம், கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் ஆகியவையும் இத்தொகுதியில் உள்ளன.

வாழை சாகுபடி

இந்துக்கள் அதிகம் வசிக்கும் இத்தொகுதியில் நாடார் சமுதாயத்தினரும், அடுத்ததாக தேவர், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினரும் அதிகம் உள்ளனர். இத்தொகுதியில் இருக்கும் ஏர்வாடி, களக்காடு பகுதிகளில் முஸ்லிம்கள் அதிகம். களக்காடு, திருக்குறுங்குடி, சிறுமளஞ்சி உள்ளிட்ட பகுதிகள் வாழை சாகுபடிக்கு பெயர்பெற்றவை. வாழைத்தார்களை சேமித்து வைப் பதற்கு குளிர்பதன கிட்டங்கி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. முடங்கிக்கிடக்கும் நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலம்.

சுற்றுலா மேம்பாட்டு திட்டம்

நாங்குநேரி பொருளாதார சிறப்பு மண்டலம் முடங்கியிருக்கிறது. இதை முழுஅளவில் செயல்படுத்த அரசுகள் முன்வரவில்லை. கிராமங்கள் அதிகம்கொண்ட இத்தொகுதியில் வேலைவாய்ப்புக்காக எந்தவித தொழிற்சாலைகளும் இல்லாததால், இளைஞர்கள் இங்கிருந்து மும்பை, சென்னை, கோவைக்கு இடம் பெயர்ந்துவருகின்றனர். தாமிரபரணி- கருமேனியாறு- நம்பியாறு நதிநீர் இணைப்பு திட்டம் 10 ஆண்டுகளாக பாதியில் நிற்கிறது.

களக்காடு- முண்டந்துறை புலிகள் காப்பகம், திருக்குறுங்குடி மலைநம்பி கோயில், களக்காடு தலையணை, செங்கல்தேரி, தேங்காய் உருளி அருவி, கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் உள்ளிட்ட அழகிய சுற்றுலா மையங்களும், நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோயில், திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயில் போன்ற ஆன்மிக சுற்றுலா தலங்களும் இருப்பதால், இப்பகுதியில் சுற்றுலா மேம்பாட்டுக்கான திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது.

தாமிரபரணி- கருமேனியாறு- நம்பியாறு நதிநீர் இணைப்பு திட்டம் 10 ஆண்டுகளாக பாதியில் நிற்கிறது. 2016 இடைத்தேர்தல்
இத்தொகுதியில் 2016-ல் வெற்றிபெற்ற வசந்தகுமார், 2019-ல் ராஜினாமா செய்தார். அப்போது நடந்த இடைத்தேர்தல் பணத்தை முன்னிலைப்படுத்தியே நடந்தது. அதிமுக சார்பில் நாராயணன், காங்கிரஸ் சார்பில் ரூபி மனோகரன் போட்டியிட்டனர். பிரச்சாரங்களில் கூட்டம் சேர்க்கவும் பணம், தலைவர்களை வரவேற்கவும் பணம், வாக்களிக்க வீடு வீடாக பணம் என, முக்கிய கட்சிகள் பணத்தை தண்ணீராக செலவழித்தன. கடைசியில் அதிமுக வெற்றிபெற்றது.

சாதக- பாதகம்

இடைத்தேர்தலில் தோல்வியுற்றா லும் அடிக்கடி நாங்குநேரி தொகுதிக்கு வந்து மக்களை சந்தித்து ரூபி மனோகரன் குறைகளை கேட்டுவந்தார். பல்வேறு உதவிகளையும் செய்து வந்தார். இதன்மூலம் கடந்த ஓராண்டுக்கு முன்பே தனது பிரச்சாரத்தை மறைமுகமாக அவர் தொடங்கிவிட்டார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியை தொகுதிக்கு வரவழைத்து பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்தினார். மேலும், நாடார் சமுதாய வாக்குகள் ரூபி மனோகரனுக்கு அதிகம் கிடைக்கும். அது தேர்தலில் கை கொடுக்கும் என்று அக்கட்சியினர் நம்புகின்றனர். முஸ்லிம் வாக்குகளை அமமுக வேட்பாளர் பிரிப்பது இவருக்கு பாதகம்.

திருநெல்வேலி தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்கியதால் நாங்குநேரி தொகுதியில் போட்டியிட வேண்டிய கட்டாயம் கணேசராஜாவுக்கு ஏற்பட்டுள்ளது. அரசின் சாதனைகளைச் சொல்லியும், அதிமுகவின் தேர்தல் அறிக்கையிலுள்ள சிறப்புகளை தெரிவித்தும் வாக்கு சேகரித்து வருகிறார். ஆனால், அவர் சார்ந்துள்ள சமுதாய வாக்குகளை அமமுக வேட்பாளர் பரமசிவ ஐயப்பன் பிரிக் கிறார். அதிருப்தியில் இருக்கும் தற்போதைய எம்எல்ஏ நாராயணன் தேர்தல் பணிகளில் அவ்வளவாக தலைகாட்டவில்லை. இது அவர் சார்ந்த நாடார் சமுதாயத்தினரின் வாக்குகளை அதிமுக பெறுவதில் பின்னடைவை ஏற்படுத்தும். ஆனாலும் காங்கிரஸுக்கு பெரும் சவாலாகவே அதிமுக விளங்குகிறது.

SCROLL FOR NEXT