இந்த சட்டப்பேரவை தேர்தல் ஒரு பெரிய அரசியல் விழிப்புணர்ச்சியை அகில இந்தியாவுக்கு வெளி கொண்டுவரப் போகிறது என திமுக பொதுச்செயலாளர் துரை முருகன் தெரிவித்தார்.
குடியாத்தம் (தனி) தொகுதி திமுக வேட்பாளர் அமலு விஜயன் அறிமுகக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
இதில், சிறப்பு விருந்தினராக திமுக பொதுச் செயலாளர் துரை முருகன் பங்கேற்று பேசும்போது, ‘‘குடியாத்தம் வரலாற்று சிறப்பு மிக்க நகரம். அரசியல் தெளிவு பெற்ற நகரம். சுயமரியாதை பட்டொளி வீசுகின்ற நகரம். காங்கிரஸ் கட்சியின் தியாக தழும்பு மறைந்து போகாமல் இருக்கும் நகரம். அண்ணாவின் உள்ளத்தை கவர்ந்த நகரம். கருணாநிதி முதலமைச்சர் ஆவதற்கு முன்பாகவே நாடகங்களுக்காக பலமுறை வந்துள்ளார். திமுகவின் கோட்டையாக இருக்கும் இந்தத் தொகுதியில் இந்த முறை திமுக வேட்பாளர் வெற்றிபெற்றே ஆக வேண்டும்.
குடியாத்தம் தொகுதியை கூட்டணி கட்சிகள் யாருக்காவது தள்ளி விடுவதில் அதிகம் நடக்கும். குடியாத்தம், கே.வி.குப்பம் தொகுதியை விட்டுக்கொடுக்காமல் பாதுகாத்தேன். இந்த முறை வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் வரிசை யாக வெற்றிபெற வேண்டும். ஊரெல்லாம் நாம் ஜெயிக்கப் போகிறபோது நம்மூரில் வெற்றி பெறாவிட்டால் நல்லதில்லை.
ஒரு யோகியைப்போல் 24 மணி நேரமும் தேர்தல் சிந்தனையோடு இருக்க வேண்டும். அதுதான் வெற்றிக்கான வாய்ப்பு. இந்த தேர்தல் ஒரு பெரிய அரசியல் விழிப் புணர்ச்சியை அகில இந்தியாவுக்கு வெளி கொண்டுவரப் போகிறது. மோடியின் அரசு, ஒரே கட்சி ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே இனம் என்று நாட்டை ஒரு திசையில் கொண்டுப்போக பார்க்கிறது.
அப்படி கொண்டுவந்தால் ஒவ்வொரு கலாச்சாரமும், மொழியும், இனமும் அழிந்துவிடும், தமிழ் மொழியின் பெருமை இருக்காது. மொழியின் தொன்மை இருக்காது. நம்முடைய பழக்க வழக்கம் இருக்காது. மோடியின் வடநாட்டு கலாச்சாரம் இந்தியா முழுவதும் பரவும். இதற்கு வட இந்தியாவில் பல மாநிலங்கள் அடிமையாகிவிட்டது.
இப்போது, அதை ஆட்சியில் இருந்து எதிர்ப்பவர் மம்தா பானர்ஜி. ஆட்சியில் இல்லாமல் மத்திய அரசுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குபவர் ஸ்டாலின். கருணாநிதி கூட முதலமைச்சர் ஆன பிறகுதான் டெல்லி வட்டாரத்தில் செல்வாக்கு பெற்றார். அண்ணாவும் நாடாளுமன்றத்தில் முதல் உரையை நிகழ்த்திய பிறகு அவரது அறிவு, ஆற்றலை புரிந்து கொண்டு பாராட்டியது.
முதலமைச்சராகமலே அகில இந்திய அளவில் பாராட்டுக்குரிய தலைவராக மு.க.ஸ்டாலின் இருக் கிறார். ஸ்டாலின் கணக்குப்படி 190 இடங்களில் வெற்றிபெறுவோம். எப்படி இருந்தாலும் 185 இடங்களுக்கு மேல்தான் திமுக கூட்டணி வெற்றிபெறும். இது நாங்கள் போட்ட கணக்கு இல்லை. மத்திய அரசு போட்ட கணக்கு’’ என தெரிவித்தார்.