தமிழகம்

தபால் வாக்குகளைப் பெற 34 குழுக்கள் அமைப்பு: சிவகங்கை மாவட்ட ஆட்சியர் தகவல்

இ.ஜெகநாதன்

‘‘சிவகங்கை மாவட்ட 4 தொகுதிகளிலும் தபால் வாக்குகளைப் பெற 34 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன,’’ என சிவகங்கை மாவட்டத் தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான பி.மதுசூதன்ரெட்டி தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் கூட்டம் தோ்தல் பார்வையாளார்கள் (பொது) சோனாவனே, முத்துகிருஷ்ணன் சங்கரநாராணயணன், போலீஸ் பார்வையாளர் லிரெமோ சோபோலோதா , செலவின பார்வையாளர்கள் ராகேஷ் படாடியா, வனஸ்ரீ ஹீள்ளன்னன்னவா ஆகியோர் முன்னிலையில் நடந்தது.

இதில் மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி பேசியதாவது:

அரசியல் கட்சியினர் பிரச்சாரம் செய்யும்போது முககவசம் அணியவும், சமூக இடைவெளியைக் கடைபிடிக்கவும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

80 வயதிற்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்களிப்பதற்கான படிவம் மார்ச் 16-ம் தேதி வரை வழங்கப்பட்டது.

காரைக்குடி தொகுதியில் 837 பேரும், திருப்பத்தூர் தொகுதியில் ஆயிரம் பேரும், சிவகங்கை தொகுதியில் 933 பேரும், மானாமதுரை (தனி) தொகுதியில் 703 பேரும் மொத்தம் 3,476 பேர் விண்ணப்பம் பெற்றுள்ளனர்.

அவர்களது வீடுகளுக்கு மார்ச் 26 முதல் மார்ச் 30 வரை அதிகாரிகள் குழு சென்று தபால் வாக்குகளை பெற்று கொள்ளும்.

இதற்காக காரைக்குடியில் 8 குழுக்கள், திருப்பத்தூரில் 10, சிவகங்கையில் 9, மானாமதுரையில் 7 என மொத்தம் 34 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. குழுவினருடன் அரசியல் கட்சிகளின் முகவர்களும் செல்லலாம்.

மேலும் ரயில்வே பணியாளர்கள், விமான பணியாளர்கள், சிறைக் கைதிகள், கரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கும் தபால் வாக்கு படிவம் வழங்கப்பட்டுள்ளது, என்று பேசினார்.

மாவட்ட எஸ்பி ராஜராஜன், மாவட்ட வருவாய் அலுவலர் லதா, திருப்பத்தூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சிந்து, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ராம்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT