தமிழகம்

ரூ.35 கோடி நிதி நிறுவன மோசடியை சிபிஐ விசாரிக்கக்கோரி வழக்கு: பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் அறிக்கை அளிக்க உத்தரவு

கி.மகாராஜன்

மதுரை உட்பட பல்வேறு இடங்களில் நடைபெற்ற ரூ.35 கோடி நிதி நிறுவன மோசடி வழக்கின் தற்போதைய நிலை குறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரத்தைச் சேர்ந்த செய்யது அபுதாகீர், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

மதுரை வடக்குமாசி வீதியில் இயங்கி வந்த க்ரீன் டெக் மற்றும் ஜி கேர் என்ற நிதி நிறுவனம் ரூ.1 லட்சத்திற்கு மாதம் ரூ.10 ஆயிரம் வட்டி தருவதாகவும், 13வது மாதத்தில் முதலீட்டை திருப்பி தருவதாகவும் கூறி பணம் வசூலித்தது.

இந்த நிறுவனம் மதுரை, ராமநாதபுரம், கோவை, பெங்களூரு மட்டுமில்லாமல் ஹாங்காங், மலேசியா, துபாய், ஐக்கிய அரபு எமிரேட் நாடுகளிலும் கிளை தொடங்கி 12 ஆயிரம் பேரிடம் ரூ.35 கோடி வரை வசூலித்து மோசடி செய்தது.

இந்த மோசடி குறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து அனீஸ் முகம்மது என்பவரை கைது செய்தனர். வெளிநாடுகளிலும் மோசடி நடைபெற்றுள்ளதால் இந்த வழக்கை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் விசாரிப்பது சரியாக இருக்காது. எனவே

இந்த மோசடி வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி ஆர்.ஹேமலதா முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் திருமுருகன் வாதிட்டார்.

பின்னர், நிதி நிறுவன மோசடி வழக்கின் தற்போதைய நிலை குறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 8-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

SCROLL FOR NEXT