தமிழகம்

தமிழகத்தில் 4 மண்டலங்களில் அதிமுக-திமுகவில் எது முன்னிலை?- சென்னையில் யாருக்கு வாய்ப்பு?- தனியார் தொலைக்காட்சி கருத்துக்கணிப்பு முடிவு

செய்திப்பிரிவு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள 4 மண்டலங்கள் மற்றும் தலைநகர் சென்னையில் மொத்த தொகுதிகளில் திமுக-அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் எந்தக் கட்சி முன்னிலை பெறும், யார் வெற்றி பெற வாய்ப்பு எனத் தனியார் தொலைக்காட்சி கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையில் ஒரு அணி, அதிமுக தலைமையில் ஒரு அணி, மக்கள் நீதி மய்யம் தலைமையில் ஒரு அணி, அமமுக தலைமையில் ஒரு அணி போட்டியிட, நாம் தமிழர் கட்சி மட்டும் தனித்துக் களம் காண்கிறது. திமுக ஆட்சியைப் பிடிக்க அதிக வாய்ப்புள்ளதாகப் பேசப்பட்டு வரும் நிலையில், ஆட்சியைத் தக்கவைக்க அதிமுகவும், ஆட்சியைப் பிடிக்க திமுகவும் கடுமையான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் சமீபத்தில் சி-வோட்டர்ஸ் நடத்திய கருத்துக்கணிப்பில் திமுக அணி 160 இடங்களுக்கு மேல் வெல்லும் எனக் கணிக்கப்பட்டிருந்தது. அதிமுக 60 இடங்களுக்கு மேல் வெல்லலாம் எனக் கணிக்கப்பட்டிருந்தது. நேற்று தமிழில் வெளிவரும் தனியார் தொலைக்காட்சி ஏஜென்சி மூலம் எடுத்த கருத்துக்கணிப்பில் திமுக கூட்டணி 151- 158 இடங்களை வெல்லும் அதிமுக கூட்டணி 76-83 இடங்களை வெல்லும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தெற்கு மண்டலம், வடக்கு மண்டலம், மேற்கு மண்டலம், மத்திய மண்டலம் என நான்கு மண்டலங்கள் உண்டு. இதுதவிர தலைநகர் சென்னை உண்டு. இதில் மேற்கு மண்டலத்தில் அதிமுக எப்போதும் வலுவாக இருக்கும். மத்திய மண்டலம், வடக்கு மண்டலத்தில் திமுக வலுவாக இருக்கும். தென் மண்டலத்தில் சமீபகாலமாக திமுக வலுவாக உள்ளது. சென்னையில் 2015 வெள்ளம் காரணமாக அதிமுக பல இடங்களை இழந்தது.

நேற்று வெளியான கருத்துக்கணிப்பில் வழக்கமாக மேற்கு மண்டலத்தில் செல்வாக்காக உள்ள அதிமுக அதைத் தக்கவைத்துள்ளது. ஆனால், பாமக இருப்பதால் வடக்கு மண்டலம் கைகொடுக்கும் என்கிற எதிர்பார்ப்பு பொய்யாகியுள்ளது. மண்டலவாரியாக வெளியான கருத்துக்கணிப்பில் திமுக கூட்டணியே பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றியுள்ளது.

மண்டல வாரியாக கட்சிகள் பெறும் இடங்கள் விவரம்

* தெற்கு மண்டலத்தில் அதிமுகவுக்கு 11-15 இடங்கள், திமுகவுக்கு 45-49 இடங்கள்.

* மத்திய மண்டலத்தில் அதிமுகவுக்கு 14-15 இடங்கள், திமுகவுக்கு 21-22 இடங்கள்.

* மேற்கு மண்டலத்தில் அதிமுகவுக்கு 28-31 இடங்கள் , திமுகவுக்கு 11-14 இடங்கள்.

* வடக்கு மண்டலத்தில் 19-24 இடங்கள், திமுகவுக்கு 54-59 இடங்கள்.

* சென்னையில் 16 தொகுதிகளில் கூடுதலாக 2 தொகுதிகளுடன் சென்னையில் 18 தொகுதிகளில் அதிமுகவுக்கு 0-1 தொகுதியும், திமுக கூட்டணிக்கு 17-18 இடங்களும் கிடைக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

மொத்த வாக்கு சதவீதம்: கட்சி வாரியாக நான்கு மண்டலங்கள், சென்னையில்

தெற்கு மண்டலம்: அதிமுக- 24.58%, திமுக 35.90%, மநீம 6.4%, நாம் தமிழர் 7.61%,

மேற்கு மண்டலம்: அதிமுக- 36.54%, திமுக 28.5%. மநீம 9.26%, நா.த. 3.44%

மத்திய மண்டலம்: அதிமுக- 30.53%, திமுக 34.33%. மநீம 4.61%, நா.த. 5.29%

வடக்கு மண்டலம்: அதிமுக- 32.61%, திமுக 42.93%. மநீம 2.50%, நா.த. 2.93%

சென்னை 16+2= 18 தொகுதிகள்: அதிமுக- 20.81%, திமுக 47.27%. மநீம 8.40%, நா.த. 4.46%

எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT