தமிழகம்

தமிழகத்தில் நல்லாட்சி அமைய திமுக கூட்டணியை ஆதரியுங்கள்: மதுரையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்கபாலு பிரச்சாரம்

என்.சன்னாசி

தமிழகத்தில் நல்லாட்சி அமைய திமுக கூட்டணியை ஆதரியுங்கள் என மதுரையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்கபாலு பிரச்சாரம் செய்தார்.

மதுரை வடக்கு தொகுதி அந்தநேரி பகுதியில் திமுக வேட்பாளர் கோ.தளபதியை ஆதரித்து, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் கேவி. தங்கபாலு இன்று பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது: 2021 சட்டப்பேரவைத் தேர்தல் மிகவும் முக்கியமான ஒன்று. தமிழகத்தை 10 ஆண்டுகளாக சீரழித்த அதிமுக ஒருபக்கம், மற்றொரு பக்கம் இந்தியாவை சீர்குலைத்து நாட்டு மக்களை வேதனை, சோதனையில் ஆழ்த்துகிற பாஜக. இந்த இரண்டு கட்சிகளையும் நாம் எதிர்கொள்ளும் தேர்தல் இது.

பாஜக, அதிமுகவும் சேர்ந்து தமிழகத்திற்கு கொடுக்கும் சமூகப் பிரச்சினைகள் கொஞ்சமல்ல. 10 ஆண்டுகளாக வளர்ச்சித் திட்டங்கள் தடுக்கப்பட்டுள்ளது.

மு.க.ஸ்டாலின் தலைமையில் வெற்றிக் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இக்கூட்டணிக்கு மக்களவைத் தேர்தலில் மாபெரும் வெற்றியை தந்துள்ளீர்கள். 5 ஆண்டுகளாக சிறந்த எதிர்க்கட்சித் தலைவராக உள்ளார்.

தமிழக வளர்ச்சியில் திமுக ஆற்றிய பணிக்கு இணையாக, அதிமுக எதுவும் செய்யவில்லை என்பது சரித்திரம். ஆனால், அதிமுக தமிழகத்திற்கு தலைகுனிவு ஏற்படுத்திய கொடுமைகள் ஏராளம்.

குறிப்பாக தமிழகத்தில் 10 ஆண்டுகளில் எந்தத் தொழிற்சாலையும் வரவில்லை. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில்லை. பாஜகவின் பணமதிப்பு இழப்பிற்கு பிறகு முதல் 6 மாதத்தில் 45 கோடி பேர் ஏழைகளாக மாறினர்.

தமிழக உரிமையைக் கேட்கவேண்டி முதல்வருக்கு கேட்கத் தெம்பில்லை. இந்தியாவில் இரு தலைவர்கள் மட்டுமே மோடிக்கு எதிராக குரல் கொடுக்கின்றனர். ராகுல்காந்தி தொடர்ந்து கண்டனக் குரல் எழுப்புகிறார். அவரைத் தொடர்ந்து மாநிலக் கட்சி என்றுமில்லாமல் இந்திய ஜனநாயகம் காக்க கலைஞர் வழியில் மு.க.ஸ்டாலின் மோடிக்கு எதிராக குரல் கொடுக்கும் தலைவராக உள்ளார். இரு தலைவர்களும் தமிழகத்தை நேசிக்கின்றனர். வளர்ச்சிகளை முன்னெடுக்கின்றனர்.

தமிழக மக்களுக்கு நேர்ந்துள்ள கொடுமையை மீட்க தர்மயுத்ததை நடத்துகிறாம். தமிழக முன்னாள் முதல்வர் மறைந்தபின், ஸ்டாலின் நினைத்திருந்தால் 10 எம்எல்ஏக்களை இழுந்து ஆட்சிக்கு வந்திருக்கலாம்.

அவர் ஜனநாயக நம்பிக்கை கொண்ட தலைவராக இருப்பதால் மக்களை சந்தித்து, வெற்றி பெற்று ஆட்சிக்கு வர உறுதியெடுத்து வலம் வருகிறார். கலைஞர் வழியில் தமிழகத்தில் நல்லாட்சி தரவேண்டும் என்ற முயற்சி எடுத்துள்ளார்.

இந்த வெற்றிக் கூட்டணியில் நாமும் இணைந்து இருக்கிறோம். வடக்குத் தொகுதியில் போட்டியிடும் கோ. தளபதிக்கு உதயசூரியனுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள்.

தமிழகம் முழுவதும் பாஜக, அதிமுக அரசுகளுக்கு எதிரான பேரலையில் அவ்விரு கட்சிகளும் அடையாளம் தெரியாமல் போகும். நமது கூட்டணி 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும். மு.க.ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கார்த்திகேயன், பொதுக்குழு உறுப்பினர் சி.எம்.சையது பாபு, முன்னாள் மாவட்டத் தலைவர் செல்வராஜ்பாண்டியன், பகுதிச் செயலர் அக்ரி கணேசன், பொன். சேது உள்ளிட்ட கூட்டணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT