முதல்வர், அமைச்சர் பதவிகளைக் கொடுத்த ஜெயலலிதா, சசிகலாவுக்கே துரோகம் செய்தவர்தான் முதல்வர் பழனிசாமி என திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி தெரிவித்தார்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை ஆதரித்து பொன்மலைப் பட்டி, குண்டூர் ஆகிய இடங்களில் திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:
’’உணவுப் பொருட்களை இப்போது யாரும், எங்கும் பதுக்கி வைக்க முடியாது. ஆனால் புதிய வேளாண் சட்டம் வந்தால், யார் வேண்டுமானாலும் பதுக்கி வைத்து, எந்த விலைக்கு வேண்டுமானாலும் விற்கலாம். இப்படிப்பட்ட ஒரு மோசமான சட்டத்தை முதல்வர் பழனிசாமி வரவேற்றார். இப்போது தேர்தல் வந்துவிட்டதால், சட்டத்துக்கு எதிராக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதாகக் கூறுகிறார். நினைத்தவுடன் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்கிறார். நாளுக்கு நாள் நிறம் மாறிக் கொண்டிருந்தால் அவரது பெயர் பச்சோந்திதானே.
யார் காலில் விழுந்து, முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டாரோ அவரது காலையே வாரிவிட்டு, அவரைக் கட்சியிலேயே சேர்க்க முடியாது எனக் கூறுகிறார். இந்த முடிவைக்கூட டெல்லியில் கேட்டுச் செயல்படுகிறார். தன்னை முதல்வராக்கிய சசிகலாவுக்கு மட்டுமல்ல, தனக்கு அமைச்சர் பதவி கொடுத்த ஜெயலலிதாவுக்கும் துரோகம் செய்தவர்தான் முதல்வர் பழனிசாமி.
ஜெயலலிதாவின் மரணத்தில் இருக்கும் மர்மம் குறித்து இப்போது வரை நமக்குத் தெரியாது. இதுகுறித்துக் கேள்வி கேட்டபோது கமிஷன் அமைத்தனர். அதன்பின் இவர்கள் 'கமிஷன்' வாங்குவதில்தான் அக்கறை காட்டுகிறார்களே தவிர, அந்த கமிஷன் எந்த முடிவையும் வெளியில் சொல்லவில்லை. எனவேதான் ஜெயலலிதா மரணத்துக்கு உண்மையான விசாரணை திமுக ஆட்சியில் நடத்தப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். தவறு நடந்திருந்தால், அதைச் செய்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவர்.
பெண்களுக்குப் பாதுகாப்பே இல்லாத இந்த ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். அராஜகத்தின் உச்சம் இந்த ஆட்சியில் நடைபெற்று வருகிறது. அதிமுகவினர் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பிரச்சாரம் செய்யலாம். ஆனால் திமுக எனில் ஆயிரம் கேள்விகளைக் கேட்கின்றனர். அனைத்துத் துறைகளிலும் ஊழல் நடைபெறுகிறது.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தகுதியுள்ள அனைவருக்கும் ரூ.1,500 முதியோர் உதவித்தொகை வழங்கப்படும். பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படும். நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யலாம். கேஸ் சிலிண்டர் ஒவ்வொன்றுக்கும் ரூ.100 மானியம் வழங்கப்படும். பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும். சுய உதவிக் குழுக்கள் மூலம் கடன் வழங்கப்படும்.
விவசாயக் கடன்கள் ரத்து செய்யப்படும். புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கித் தரப்படும். 75 சதவீத வேலை தமிழர்களுக்கு வழங்கப்படும். பொன்மலை பணிமனையில் 80 சதவீதப் பணியாளர்கள் வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். மின்துறை உட்பட மாநில அரசின் பல துறைகளிலும் பிற மாநிலத்தவர்களுக்கு அதிகளவில் பணிவாய்ப்பு வழங்க அதிமுக அரசு வழி செய்துள்ளது. இவர்கள் மத்திய அரசின் அடிமையாக உள்ளனர்.
இத்தொகுதியில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிடும் ப.குமார், 10 ஆண்டுகளாக இதுவரை இப்பகுதிக்கு எந்தத் திட்டத்தையும் கொண்டு வரவில்லை. எதிர்க் கட்சி எம்எல்ஏவாக இருந்தும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இத்தொகுதிக்கு, பல நல்ல திட்டங்களைச் செய்து கொடுத்துள்ளார். அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும். தமிழர் உரிமைகளை, தமிழ் அடையாளங்களை மத்திய அரசிடம் அடகு வைத்துள்ளனர். தமிழருக்கு எதிரான இந்த ஆட்சிக்கு முடிவுகட்ட வேண்டும்.’’
இவ்வாறு கனிமொழி தெரிவித்தார்.