முன்னாள் அமைச்சர் ம.சின்னசாமி. 
தமிழகம்

ஸ்டாலினை இயக்கும் கிச்சன் கேபினட்; கருணாநிதி போல ஆளுமை கிடையாது; அதிமுகவில் இணைகிறேன்: ம.சின்னசாமி பேட்டி

ஜி.ராதாகிருஷ்ணன்

ஸ்டாலினை ஏதோ ஒரு சக்தி சுயமாகச் செயல்படவிடாமல் தடுப்பதாகவும் முதல்வர் முன்னிலையில் அதிமுகவில் இணைய உள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் ம.சின்னசாமி தெரிவித்துள்ளார்.

திமுக மாநில விவசாய அணிச் செயலாளர் கரூர் ம.சின்னசாமி, கட்சிக் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் அவர் தற்காலிகமாக நீக்கப்படுவதாக திமுக அறிவித்துள்ளது.

இதற்கிடையே ம.சின்னசாமி கரூரில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களிடம் இன்று (மார்ச் 23-ம் தேதி) கூறியதாவது:

''திமுக தலைவர் ஸ்டாலின், முன்னாள் தலைவர் கருணாநிதி ஆகியோர் தலைமையில் கடந்த 10 ஆண்டுகளாகத் திமுகவில் பணியாற்றினேன். சட்டப்பேரவை, மக்களவைத் தேர்தல்களில் போட்டியிட வாய்ப்பு அளிக்காமல் தட்டிக்கழிக்கின்றனர். மக்கள் ஆதரவுள்ள எனக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இதற்கு ஸ்டாலின் காரணமல்ல. அவருடைய பின்னால் உள்ளோர் தடுக்கின்றனர். அவர் பின்னால் இருக்கும் ஏதோ ஒரு சக்தி அவரை சுயமாகச் செயல்படவிடாமல் தடுக்கிறது என்பதைப் புரிந்துகொண்டேன்.

அது ஐபேக் இல்லை. ஸ்டாலின் குடும்பத்தைச் சேர்ந்தோர் தடுக்கின்றனர். அவர் வீட்டில் கிச்சன் கேபினட்டும் உள்ளது. அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டேன். தற்போது போட்டியிடும் வேட்பாளரைவிட நான் தகுதிக் குறைவாக இருந்தால், நானே வாய்ப்பு கேட்கமாட்டேன். தேர்தல்களில் போட்டியிட வாய்ப்பு கேட்கும்போதெல்லாம் ஏதாவது காரணம் சொல்லித் தட்டிக்கழிக்கின்றனர்.

ஒரே ஒரு முறை மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டது. இதுகுறித்து ஸ்டாலினிடமே அரை மணி நேரம் பேசினேன். அவரால் சுயமாகச் செயல்பட முடியாத நிலை உள்ளது. சொந்தமாக முடிவெடுக்க முடியாத நிலையும் உள்ளது.ஸ்டாலின் கடுமையான உழைப்பாளி. நன்கு பழகக் கூடியவர். ஆனால், கருணாநிதி போல ஆளுமை கிடையாது. சொந்தமாக முடிவெடுக்க முடியாமல் அடுத்தவர்கள் சொல்வதைக் கேட்டுச் செயல்படும் நிலையில் உள்ளார். அவரிடம் ஆளுமை இல்லை. எனவே திமுகவை விட்டு விலகுகிறேன்.

தாய்க் கழகமாக அதிமுகவில் நாளை கரூரில் முதல்வர் பழனிசாமி முன்னிலையில் இணைகிறேன். அதிமுகவில் முன்பு தலைவர்கள் இருந்தனர். தற்போது தொண்டர்கள் தலைவர்களாக இருக்கின்றனர்''.

இவ்வாறு கரூர் ம.சின்னசாமி தெரிவித்தார்.

கரூர் ம.சின்னசாமி யார்?

2014 மக்களவைத் தேர்தலில் கரூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டவர் கரூர் ம.சின்னசாமி (70). 1972ஆம் ஆண்டு முதல் தனது அரசியல் பணியை ஆரம்பித்தவர் சின்னசாமி. பின்பு அதிமுக மாநிலத் துணைப் பொதுச் செயலாளராகவும் இருந்தார். 1980 -1984 வரை எம்எல்ஏவாக இருந்தார். 1991- 96 ஆட்சிக் காலத்தில் ஜெயலலிதா அமைச்சரவையில் 3 ஆண்டுகள் தமிழகத் தொழில்துறை அமைச்சராக இருந்தார்.

1999ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டு வரை கரூர் எம்.பி.யாக இருந்தார். அதிமுக தலைமையோடு ஏற்பட்ட மோதல் காரணமாக அந்தக் கட்சியில் இருந்து வெளியேறி 2010ஆம் ஆண்டு ஜூன் மாதம் திமுகவில் இணைந்தார். தற்போது மாநில விவசாய அணிச் செயலாளராகப் பதவி வகிக்கின்றார். ஸ்டாலினின் தீவிர ஆதரவாளர் ஆவார்.

சமீபகாலமாக செந்தில் பாலாஜி திமுகவுக்கு வந்ததிலிருந்து அவருக்கும் செந்தில் பாலாஜிக்கும் ஒத்துப்போகவில்லை என்று கூறப்பட்டது. அவர் மீண்டும் அதிமுகவுக்குத் தாவ உள்ளதாகக் கடந்த ஆண்டு தகவல் வெளியானது. ஆனால், திமுகவிலேயே தொடர்ந்தார். இந்நிலையில் கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதாக அவர் இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

SCROLL FOR NEXT