தமிழகத்தில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் வேகமாகப் பரவி வருகிறது. பொதுமக்கள் மத்தியில் முகக்கவசம், தனிநபர் இடைவெளி உள்ளிட்ட விவகாரங்களில் உள்ள அக்கறையின்மை, தேர்தல் பிரச்சாரக் காலகட்டம் எனப் பல அம்சங்கள் கரோனா பரவலை அதிகரிக்கலாம் என்கிற நிலையில் நிலைமையின் தீவிரம் குறித்து மருத்துவ நிபுணர்களுடன் தலைமைச் செயலர் இன்று ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழகத்தில் வெகுவாகக் குறைந்த நிலையில் சமீபகாலமாக மீண்டும் கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கடந்த 3 நாட்களுக்கு மேலாக 1000 என்கிற எண்ணிக்கையைக் கடந்து தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று 1,385 பேருக்குத் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதில் அதிகபட்சமாக சென்னையில் 496 பேருக்குத் தொற்று உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இது தமிழக எண்ணிக்கையில் 35% ஆகும். சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர், திருவள்ளுர், தஞ்சாவூர், காஞ்சிபுரம், திருப்பூர், சேலம், மதுரை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் அதற்கு முந்தைய வாரத்தில் நோய்த் தொற்றை ஒப்பிடும்போது கடந்த வாரம் நோய்த்தொற்று சற்று அதிகரித்து காணப்படுகிறது.
இதனைக் கருத்தில் கொண்டு, அனைத்து மாவட்டங்களிலும் ஆர்டி-பிசிஆர் பரிசோதனையை விரிவுபடுத்தவும், குறிப்பாக நோய்த்தொற்று அதிகமுள்ள மாவட்டங்களில் தனி கவனம் செலுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சென்னையைப் பொறுத்தமட்டில் க்ளஸ்டர் எனப்படும் கொத்து கொத்தாக கரோனா பரவும் ஏரியாக்கள் என மடிப்பாக்கம், தி.நகர் மயிலாப்பூர், வடசென்னையில் கொடுங்கையூர், தண்டையார்பேட்டை, பெரம்பூர் என 13 பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சென்னையில் குடும்பம் குடும்பமாக கரோனா தொற்று பரவுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன் பெருங்குடி, தரமணி மற்றும் கந்தன்சாவடி ஆகிய மூன்று இடங்களில் செயல்படும் ஒரு தனியார் நிறுவனத்தில் முதலில் 4 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டது கண்டறியப்பட்டவுடன், அவர்களோடு உடனிருந்தவர்கள் மற்றும் தொடர்பில் இருந்த 364 நபர்களுக்குப் பரிசோதனை செய்ததில், 40 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இது தவிர, தமிழ்நாட்டில் பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் காய்ச்சல் முகாம்கள் மூலமாகவும், அரசு மற்றும் தனியார் ஆய்வகங்கள் மூலமாக பிசிஆர் மாதிரிகள் எடுத்து வரும் நிலையில், மக்கள் கூடும் இடங்களிலும் மாதிரிகள் எடுப்பதற்குக் கூடுதலாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பாரிமுனை மற்றும் சந்தைப் பகுதிகளில் ஆங்காங்கே காய்ச்சல் முகாம்கள் நடத்தி பிசிஆர் பரிசோதனை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தற்போது நோய் அதிகமுள்ள இடங்களில் தேவையான படுக்கை வசதிகள், மருந்துகள், பாதுகாப்புக் கவசங்கள், முகக்கவசங்கள் மற்றும் பிராணவாயு கருவிகளும் தயார் நிலையில் உள்ளன. கடந்த 4 நாட்களில் 38,722 நபர்களுக்கு கோவிட் சார்ந்த பழக்கங்களான, முகக்கவசம் அணிவது மற்றும் நிறுவனங்களில் நிலையான வழிமுறைகளைப் பின்பற்றுவது போன்றவற்றை மீறிய காரணங்களுக்காக 83 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கரோனா பரவலைத் தடுப்பது, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆராய மருத்துவ நிபுணர்களுடன் தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அவருடன் சுகாதாரத் துறைச் செயலர், பேரிடர் மேலாண்மைத் துறைச் செயலர், டிஜிபி, காவல் ஆணையர் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர்.