தமிழகம்

தமிழகத்தில் வெல்லப்போவது யார்? யாருக்கு ஆதரவு அலை?- தனியார் தொலைக்காட்சி கருத்துக்கணிப்பு முடிவு விவரம்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலில் திமுக, அதிமுக அணிகள், மற்ற கட்சிகள் போட்டிபோடும் நிலையில் யாருக்கு ஆதரவு அலை வீசுகிறது, எந்தக் கட்சி எவ்வளவு தொகுதிகள் பெறும் என மண்டல வாரியாக, பிரச்சினைகள் அடிப்படையில் தனியார் தொலைக்காட்சி கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்.6 அன்று நடக்கிறது. இதில் திமுக தலைமையில் காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிகள், விசிக, முஸ்லிம் லீக், மமக, கொமதேக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. மநீம, அமமுக கட்சிகளும் கூட்டணி அமைத்துள்ளன. நாதக மட்டும் தனித்துக் களம் காண்கிறது.

இந்தத் தேர்தலில் ஆரம்பத்திலிருந்தே திமுகவுக்கு ஆதரவான நிலை உள்ளது என்கிற கருத்து எழுந்தது. சி-வோட்டர்ஸ் நடத்திய கருத்துக்கணிப்பில் திமுக அணி 160 இடங்களுக்கு மேல் வெல்லும், அதிமுக அணி 60 இடங்கள் வரை வெல்லும் எனக் கணிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வழக்கமாக ஒவ்வொரு பொதுத் தேர்தலிலும் கருத்துக்கணிப்பை நடத்தும் தனியார் தமிழ்த் தொலைக்காட்சி நேற்று கருத்துக்கணிப்பை வெளியிட்டது.

அதில் பல பிரச்சினைகளைத் தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழலை வைத்து கேள்வி எழுப்பப்பட்டது. அதில் மக்களின் எண்ணங்கள் வெளிப்பட்டதைப் பதிவு செய்தது.

1. கீழ்க்கண்டவற்றில் எதை ஆதரிக்கிறீர்கள் என்பதற்கு

* 81.20% பேர் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடந்த விவசாயிகள் போராட்டத்தை ஆதரிப்பதாகவும்

* 8.24% பேர் வேளாண் சட்டங்களை ஆதரிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

2. மத்தியில் ஆட்சியில் இருந்தபோது முந்தைய காங்கிரஸ் ஆட்சியை விட தற்போதைய பாஜக அரசு தமிழகத்துக்கு கூடுதல் நன்மைகளைச் செய்திருப்பதாக நினைக்கிறீர்களா? என்கிற கேள்விக்கு

* 22.87% பேர் நினைக்கிறோம், ஆம் எனவும்,

* 60.03% பேர் இல்லை, நினைக்கவில்லை எனவும்,

* 7.09% பேர் வேறு கருத்துகளையும்,

* 10.01% தெரியாது/ சொல்ல இயலாது எனவும் தெரிவித்துள்ளனர்.

3. அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையேயான கூட்டணி பற்றி நீங்கள் கருதுவது என்ன? என்ற கேள்விக்கு,

சந்தர்ப்பவாத கூட்டணி - 36.87%

தமிழகத்துக்கு நல்லது - 16.66%

அதிமுக ஆதாயமடையும் - 8.44%

அதிமுகவுக்கு பாதிப்பு ஏற்படும் - 7.02%

பாஜக ஆதாயமடையும் - 5.91%

வேறு கருத்து - 7.61%

தெரியாது/ சொல்ல இயலாது - 17.49%

எனவும் பதிலளித்துள்ளனர்.


4. ஆட்சியை அமைக்கக் காரணியாக அமைவது

ஸ்டாலின் தலைமை 37.96%

மதச்சார்பின்மை - 8.35%

இபிஎஸ் ஆட்சிக்கு எதிரான மனநிலை - 6.72%

அதிமுக - பாஜக கூட்டணி - 9.16%

அதிமுக அரசின் மீதான மத்திய அரசின் கட்டுப்பாடு - 6.48%

வேறு கருத்து - 11.93%

தெரியாது / சொல்ல இயலாது - 19.41%

எனவும் பதிலளித்திருந்தனர்.

5. அடுத்த முதல்வராக யாரை ஆதரிக்கிறீர்கள் என்கிற கேள்விக்கு

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு 37.5%

முதல்வர் பழனிசாமிக்கு 28.33%

மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு 6.45%

நாதக சீமானுக்கு 4.93%

சசிகலாவுக்கு 1.33%

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு 1.13%

ஆதரவு தெரிவித்துள்ளனர்.

6. கட்சி வாரியாக எந்தக் கட்சிக்கு வாக்களிப்பீர்கள் என்கிற கேள்விக்கு

திமுகவுக்கு 38.20%

அதிமுகவுக்கு 28.48%

மநீமக்கு 6.30%

நாதக 4.84%

சசிகலா 1.09%

மற்றவை 9.53%

எனத் தெரிவித்துள்ளனர்.

7. அதிக இடங்களைப் பெறும் கூட்டணி என்கிற முறையில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில்

திமுக கூட்டணி 151- 158 இடங்களை வெல்லும்

அதிமுக கூட்டணி 76-83 இடங்களை வெல்லும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

இது தவிர தமிழகத்தை மண்டல வாரியாகவும், சென்னையில் 18 தொகுதிகள் எனவும் கட்சி வாரியாகப் பிரிக்கப்பட்டுள்ளது. சி-வோட்டர்ஸ் கருத்துக்கணிப்புபோல் தனியார் தொலைக்காட்சி கருத்துக்கணிப்பும் திமுக கூட்டணியே பெரிய அளவில் வெல்லும் எனக் கணித்துள்ளது. ஸ்டாலின் தலைமையை மக்கள் ஏற்றுள்ளனர் என்பதையும் கூட்டணி வெல்வதற்கான காரணியில் அதிகமாகத் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் வேளாண் சட்டங்களை யாரும் எதிர்க்கவில்லை என்பதை இல்லை என்று நிரூபிக்கும் வண்ணம் தேர்தலில் பெரிய விஷயமாக 82% பேர் வேளாண் சட்டங்களை எதிர்ப்பதாகத் தெரிவித்துள்ளனர். மூன்றாவது இடத்துக்கு மக்கள் நீதி மய்யம் முதலிடத்தைப் பிடிக்கிறது.

பின்னாலேயே சீமான் வருகிறார். இந்தக் கருத்துக்கணிப்பில் அமமுக குறித்த கேள்விகள் எதுவும் இல்லை. மாறாக சசிகலாவை முன்னிறுத்திக் கேட்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT