தமிழகம்

'அசுரன் வெற்றிமாறனுக்கு அன்புநிறை வாழ்த்து'- தேசிய விருது பெற்றவர்களுக்கு ஸ்டாலின் பாராட்டு

செய்திப்பிரிவு

மென்மேலும் சிறப்புகளைப் பெற வேண்டும் என்று தமிழகத்தில் இருந்து தேசிய விருது பெற்றவர்களைத் திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்தியுள்ளார்.

நாட்டின் 67-வது தேசியத் திரைப்பட விருதுகள் டெல்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் நேற்று (திங்கட்கிழமை) மாலை அறிவிக்கப்பட்டன. 2019-ம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான விருதுகள், கரோனா நெருக்கடியால் கிட்டத்தட்ட ஒரு வருடம் தாமதமாக அறிவிக்கப்பட்டன.

இதில் ’அசுரன்’ படத்துக்காகச் சிறந்த நடிகராக தனுஷ் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவ்விருதை ’போஸ்லே’ திரைப்படத்தில் நடித்த மனோஜ் பாஜ்பாயுடன் தனுஷ் பகிர்ந்து கொள்கிறார். தனுஷ் ஏற்கெனவே ’ஆடுகளம்’ திரைப்படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சிறந்த தமிழ்த் திரைப்படமாகவும் ’அசுரன்’ தேர்வு செய்யப்பட்டுள்ளது.

’சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படத்தில் திருநங்கையாக நடித்த விஜய் சேதுபதி சிறந்த உறுதுணை நடிகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பார்த்திபன் இயக்கத்தில் உருவான ’ஒத்த செருப்பு சைஸ் 7’ திரைப்படத்துக்கு சிறப்பு நடுவர் தேர்வு விருது அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் சிறந்த ஒலியமைப்புக்காக ரசுல் பூக்குட்டி விருது பெற்றுள்ளார்.

’கேடி (எ) கருப்புதுரை’ படத்தில் நடித்த நாக விஷாலுக்கு சிறந்த குழந்தை நட்சத்திர விருது வழங்கப்படுகிறது. இசையமைப்பாளர் டி.இமானுக்கு, ’விஸ்வாசம்’ படத்துக்காக, சிறந்த இசையமைப்பாளர் (பாடல்கள்) விருது கிடைத்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் இருந்து தேசிய விருது பெற்றவர்களைத் திமுக தலைவர் ஸ்டாலின் பாராட்டியுள்ளார். இதுதொடர்பாகத் தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள அவர், ''தேசிய விருது பெறும் தனுஷ், விஜய் சேதுபதி, பார்த்திபன் மற்றும் இமான் ஆகியோருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!

அசுரன் வெற்றிமாறனுக்கு அன்புநிறை வாழ்த்துகள்! அர்ப்பணிப்புடன் - முழுமையான உழைப்பைச் செலுத்துகிறவர்களுக்கு விருது; மகிழ்கிறேன்!

மென்மேலும் சிறப்புகளைப் பெறுக!'' என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT