கோயில்களை நிர்வகிக்க தனி வாரியம், பூரணமதுவிலக்கு, சென்னை 3 மாநகராட்சியாக பிரிக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் அடங்கிய தமிழக பாஜகவின் தேர்தல் அறிக்கையை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நேற்று வெளியிட்டார்.
சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஓட்டலில் பாஜக சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. இந்தநிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டு "தொலைநோக்கு பத்திரம்" என்ற தலைப்பிலான தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
அந்த தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு: 50 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும், விவசாயிகளுக்கு வழங்கப்படுவது போல மீனவர்களுக்கும் வருடாந்திர உதவித் தொகை ரூ.6 ஆயிரம் வழங்கப்படும், தொழில் செய்ய ஏதுவான சூழ்நிலையை உருவாக்கி தென் இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழகத்தை உருவாக்குவோம், தமிழகத்தில் உள்ள 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்களை மீட்டு பட்டியலின மக்களிடமே வழங்கப்படும், இந்துகோயில்களின் நிர்வாகம் இந்து ஆன்றோர், சான்றோர் மற்றும் துறவிகள் அடங்கிய தனித்து இயங்கும் வாரியத்திடம் ஒப்படைக்கப்படும், பூரண மதுவிலக்கு தமிழகத்தில் அமல்படுத்தப்படும், 18 முதல் 23 வயது வரை உள்ள இளம்பெண்களுக்கு இரு சக்கர வாகனஓட்டுநர் உரிமம் இலவசமாக வழங்கப்படும், 8,9-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக டேப்லேட் வழங்கப்படும், விவசாயத்துக்கு என தனி பட்ஜெட் போடப்படும், மின்னணு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்கள் வீடுகள் தோறும் நேரடியாக வழங்கப்படும், தனியார்மருத்துவமனைகளுக்கு நிகரானஅரசு பல்நோக்கு மருத்துவமனைகள் ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலும் நிறுவப்பட்டு அனைவருக்கும் இலவச சிகிச்சை அளிக்கப்படும், தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் ஜல் ஜீவன் திட்டம் மூலம் 2022-க்குள் சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் குழாய்கள் மூலம் இலவசமாக வழங்கப்படும், நிலத்தடி நீர்மட்டம் உயரவும், ஆறுகளில் நீரோட்டம் சீராக இருக்கவும் முற்றிலுமாக 5 ஆண்டுகளுக்கு ஆற்றுப் படுகைகளில் மணல் அள்ளுவது தடை செய்யப்படும், சென்னை மாநகராட்சி வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை என்று 3 மாநகராட்சிகளாக பிரிக்கப்படும், தமிழகத்தில் சட்ட மேலவை மீண்டும் கொண்டுவரப்படும். 1330 திருக்குறளையும் விளக்கங்களுடன் கல்வெட்டில் பதித்துதிருக்குறள் மாமலை பூங்கா உருவாக்கப்படும். சென்னை உயர்நீதிமன்ற கிளை கோயம்புத்தூரில் உருவாக்கப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தேர்தல் அறிக்கையை வெளியிடும் போது மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், தமிழக பாஜக இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.