மேட்டுப்பாளையம் தொகுதி இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரி மாவட்டத்தின் நுழைவுவாயிலாக உள்ளது. பழமைவாய்ந்த காரமடை அரங்கநாதர் கோயில், மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன் கோயில் ஆகியவை இத்தொகுதியின் அடையாளங்களாகும். நூற்றாண்டு பழமைவாய்ந்த உதகை மலை ரயில் மேட்டுப்பாளையத்தில் இருந்துதான் இயக்கப்படுகிறது.
அடர்ந்த காடுகளும், பவானி நதியும் தொகுதியின் எல்லைகளாக அமைந்துள்ளன. கோவை, திருப்பூர் மாவட்டத்தின் முக்கிய குடிநீர்த் திட்டங்கள், பவானி ஆற்றை நம்பியே உள்ளன. இத்தொகுதியில் பெரிய தொழிற்சாலைகள் அதிகம் இல்லை. விவசாயமும், நெசவும்தான் மக்களின் முக்கியத் தொழிலாகும். வாழை, கருவேப்பிலை, பாக்கு, தென்னை, மஞ்சள், கரும்பு பயிர்கள் அதிகம் சாகுபடி செய்யப்படுகின்றன.
சிறுமுகை, காரமடை பகுதிகளில் கைத்தறி நெசவாளர்கள் அதிக அளவில் உள்ளனர். இங்கு உருவாக்கப்படும் கலை நயம் மிக்க பட்டுச் சேலைகள், சர்வதேச அளவில் பிரபலமானவை. இத்தொகுதியில் ஒக்கலிக கவுடர் சமுதாய மக்கள் 65 சதவீதத்துக்கும் மேல் வசிக்கின்றனர். இதர சமுதாயத்தினர், சிறுபான்மை இனத்தவர் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளனர்.
மேட்டுப்பாளையம் நகராட்சி, சிறுமுகை, காரமடை, வீரபாண்டி, கூடலூர் பேரூராட்சிகள் மற்றும் நூற்றுக்கணக்கான கிராமங்களை உள்ளடக்கிய 17 ஊராட்சிகள் இங்கு உள்ளன.
2016 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஓ.கே.சின்னராஜ் 93,595 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் சுரேந்திரன் 77,481 வாக்குகள் பெற்றார். அதேபோல, தமாகா வேட்பாளர் டி.ஆர்.சண்முகசுந்தரம் 13,324, பாஜக வேட்பாளர் ஜெகந்நாதன் 11,036 வாக்குகள் பெற்றனர்.
தற்போது இத்தொகுதியில் ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 702 ஆண்கள், ஒரு லட்சத்து, 53 ஆயிரத்து 128 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 40 பேர் என மொத்தம் 2 லட்சத்து 96 ஆயிரத்து 870 வாக்காளர்கள் உள்ளனர்.
எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படுமா?
மேட்டுப்பாளையம் தொகுதி மக்கள் கூறும்போது, "காந்தவயலையும், லிங்காபுரத்தையும் இணைக்கும் காந்தையாற்றுப் பாலம் 20 அடி உயரத்தில் அமைந்துள்ளதால், மழை பெய்யும்போது நீரில் மூழ்கிவிடுகிறது. இதனால் கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இந்தப் பாலத்தை அகற்றிவிட்டு, அதே இடத்தில் 32 அடி உயரத்தில் புதிய பாலம் கட்ட வேண்டும். மேட்டுப்பாளையத்தில் உற்பத்தி செய்யப்படும் கருவேப்பிலை, எண்ணெய் பிரித்தல் உள்ளிட்டவற்றுக்காக கேரளாவுக்கு கொண்டுசெல்லப்படுகிறது. எனவே, மேட்டுப்பாளையத்திலேயே கருவேப்பிலை தொழிற்கூடம் அமைக்க வேண்டும்.
மேட்டுப்பாளையம் நகரில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளை விரைவில் முடிக்க வேண்டும். பணி முடிந்த பகுதிகளில் சாலைகளை விரைவாக சீரமைக்க வேண்டும்.
பவானி ஆற்றை மையப்படுத்தி அத்திக்கடவு-அவிநாசி கூட்டுக் குடிநீர்த் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. இதில், காரமடை, சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளை இணைக்க வேண்டும். காகித அட்டை தயாரிப்பு மற்றும் துணி தயாரிப்பு தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் ரசாயனக் கழிவுகள் ஆற்றில் கலப்பதைத் தடுக்க வேண்டும். தொகுதிக்கு உட்பட்ட பல பகுதிகளில் நிலவும் குடிநீர்ப் பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டும்.
அதிக அளவில் வனப் பகுதியைக் கொண்ட இத்தொகுதியில் மனித-விலங்குகள் மோதலைத் தடுக்கவும், விலங்குகளால் பயிர்கள் சேதமடைவதைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், சலுகை விலையில் மின்சாரம் வழங்கவும், மூலப் பொருட்களின் விலையைகுறைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.