புதுச்சேரி கனகசெட்டிக்குளத்தில் காலாப்பட்டு தொகுதி திமுக வேட்பாளர் முத்துவேலுக்கு ஆதரவு கேட்டு முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி ஆகியோர் வாக்கு சேகரித்தனர். 
தமிழகம்

என்ஆர் காங்கிரஸூம், அதிமுகவும் - புதுவையை சீர்குலைக்கும் பாஜகவுடன் களத்தில் நிற்கிறார்கள்: முன்னாள் முதல்வர் நாராயணசாமி விமர்சனம்

செய்திப்பிரிவு

புதுச்சேரி மாநிலம் காலாப்பட்டு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் முத்துவேலை ஆதரித்து முன்னாள் முதல்வர் நாராயணசாமி நேற்று மாலை காலாப்பட்டு கனகசெட்டிக்குளம் பகுதியில் திறந்த ஜீப்பில் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

மத்தியில் உள்ள பாஜக அரசுதன்னுடைய பண பலம் மற்றும்அதிகார பலத்தை வைத்து, புதுச்சேரியில் நியமன எம்எல்ஏக்கள் மூலம், மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த் துள்ளது.

இது புதுச்சேரியில் மிகப்பெரிய ஆபத்து இருக்கிறது என்பதை காட்டுகிறது. தொடர்ந்து5 ஆண்டுகள் மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றுவதற்கும், ரேஷன் கடைகளை திறந்து அரிசி போடுவதற்கும் தடை போட்டது கிரண்பேடி. ஏஎப்டி, சுதேசி, பாரதி ஆகியபஞ்சாலைகளை மூட உத்தரவிட்டது கிரண்பேடி. அவருக்கு மத்தியில் உள்ள பாஜக ஆட்சி உறுதுணையாக இருந்தது.

துரதிருஷ்டவசமாக என்ஆர் காங்கிரஸூம், அதிமுகவும் கடந்த 5 ஆண்டுகாலம் வாய்மூடி மவுனியாக இருந்துவிட்டு, தேர்தல் வருகின்ற சமயத்தில் மதவாத சக்தியாகவும், பிரிவினைவாத சக்தியாகவும், புதுச்சேரியை சீர்குலைக்கவும் வந்துள்ள பாஜகவுடன் இணைந்து மாநில அமைதியை குலைக்க இப்போது தேர்தல் களத்தில் நிற்கிறார்கள். எனவே, புதுச்சேரி மாநிலத்தில் அமைதி நிலவ காங்கிரஸ் - திமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று பேசினார்.

அப்போது அங்கிருந்தவர்கள் ஆள் உயர மாலையை திமுக வேட்பாளரிடம் கொடுத்து நாராயணசாமிக்கு போட முற்பட்டபோது, அவர் வேண்டாம் என்று மறுத்துவிட்டார். இதனால் மாலையை வேட்பாளர் போடவில்லை.

குடும்பத் தலைவர்களுக்கு மாதம் ரூ.1,000

தொடர்ந்து, முன்னாள் முதல்வர் நாராயணசாமியின் அருகில் நின்றபடி பேசிய நபர், ‘‘புதுச்சேரியில் காங்கிரஸ் - திமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சிக்கு வரும்போது குடும்பத் தலைவர்கள் ஒவ்வொருவருக்கும் மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்ற அறிவிப்பு தேர்தல் அறிக்கையில் விரைவில் வெளியிட இருக்கிறோம்’’ என்று பேசினார். இதனை காதில் வாங்கியபடி மக்களை பார்த்து கையெடுத்து கும்பிட்டபடி முன்னாள் முதல்வர் நாராயணசாமி பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

SCROLL FOR NEXT