தேர்தல் நேரத்தைப் பயன்படுத்தி சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே பாலாற்றில் மணல் கடத்தல் அதிகரித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மலைக்குன்றுகளில் இருந்து தொடங்கி சிங்கம்புணரி அணைக் கரைப்பட்டி வழியாக விருசுழி ஆற்றில் பாலாறு சேருகிறது. அணைக்கரைப்பட்டி வழியே செல்லும் இந்த பாலாற்றில் மணல் கடத்தல் அதிகளவில் நடந்து வந்தது. இதனால் நீர் உறிஞ்சும் பரப்பு குறைந்து, நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்பட்டது.
சிங்கம்புணரி அருகே அணைக்கரைப்பட்டி பாலாற்றில் மணல் கடத்தப்பட்ட இடத்தில் ஏற்பட்டுள்ள பெரும் பள்ளம். இதுகுறித்த கிராம மக்களின் புகாரையடுத்து மணல் கடத்தலை அதிகாரிகள் தடுத்து வந்தனர். தற்போது சட்டப்பேரவைத் தேர்தல் நடப்பதால் வருவாய்த்துறை அதிகாரிகள், போலீஸார் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனைப் பயன்படுத்தி மணல் கடத்தல் கும்பல் பாலாற்றில் 200 மீட்டர் நீளத்துக்கும், 20 அடி ஆழத்துக்கும் மணலை அள்ளிக் கடத்தியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் வருவாய்த்துறை அதிகாரிகள், போலீஸாரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
கிராம மக்கள் கூறுகையில், ‘‘எங்கள் பகுதியில் முக்கிய நீராதாரமாக பாலாறு உள்ளது. இரவு நேரங்களில் லாரிகளில் மணலைக் கடத்தியுள்ளனர். இதனைத் தடுக்க அதிகாரிகள் இர வில் ரோந்துப் பணியை தீவிரப் படுத்த வேண்டும்’’ என்று கூறினர்.