தூத்துக்குடி மாவட்டத்தில் போட்டியிடும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் 6 பேரையும் ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடியில் நேற்று பிரச்சாரம் செய்தார். தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் தூத்துக்குடி மாவட்டத்தில் நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்த பட்டியலை அவர் வெளியிட்டார். அதன் விவரம்:
தூத்துக்குடி மாநகரத்தில் மழைநீரை வெளியேற்ற நிரந்தர திட்டம் வகுக்க ஆவண செய்யப்படும். தூத்துக்குடியில் லாரிகளை நிறுத்துவதற்கு தனியாக முனையம் அமைக்கப்படும். விளாத்திகுளத்தில் மிளகாய்களை பாதுகாக்க கூடுதலாக குளிர்பதனக் கிடங்கு அமைக்கப்படும். அங்கு மிளகாய் மற்றும் வெங்காய கொள்முதல் மையங்கள் அமைக்கப்படும். கயத்தாறு, கடம்பூர், ஓட்டப்பிடாரம் ஆகிய பகுதிகளில் புதிதாக குளிர்பதன கிடங்குகள் அமைக்கப்படும்.
வைகுண்டம், கோவில்பட்டி, உடன்குடி, காயல்பட்டினம், திருச்செந்தூர் அரசு மருத்துவமனைகள் நவீன மயமாக்கப்படும். கட்டாலங்குளத்தில் உள்ள அழகுமுத்துக்கோன் மணிமண்டபம் சுற்றுலா மையமாக்கப்படும். கழுகுமலையில் அரசுகலை அறிவியல் கல்லூரி தொடங்கப்படும். தூத்துக்குடியில் ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்துக்கு நினைவு மண்டபம் கட்டப்படும்.
தீப்பெட்டிகள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை நியாய விலையில் சிட்கோ மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மீன்வளக் கல்லூரியில் 50 சதவீத இடங்கள் மீனவர்களுக்கு வழங்கப்படும். கோவில்பட்டி, நாசரேத்தில் அரசு செவிலியர் பயிற்சி நிலையம் அமைக்கப்படும். கோவில்பட்டியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்கப்படும். தூத்துக்குடி டபிள்யூஜிசி சாலைக்கு வஉசி பெயர் சூட்டப்படும். காயல்பட்டினத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி, தொழில் பயிற்சி பள்ளி அமைக்கப்படும்.
தாமிரபரணி, கன்னடியன் கால்வாய், நம்பியாறு, கருமேனியாறு, வைரவன் தருவை, புத்தன் தருவை ஆகியவை இணைக்கப்பட்டு நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்க நடவடிக்கை எடுக்கப்படும். தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர். திரேஸ்புரம் துறைமுகத்தில் நாட்டுப் படகுகள் நிறுத்துவதற்கு கூடுதலாக இடவசதி செய்து தரப்படும். தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
செக்காரக்குடியில் கால்நடை மருத்துவமனை தொடங்கப்படும். தூத்துக்குடியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும். மணப்பாட்டில் மீன்பிடி இறங்கு தளம் அமைக்கப்படும். ஆத்தூரில் வெற்றிலை ஏற்றுமதி மையம் அமைக்கப்படும். உப்பள தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்கப்படும். கோவில்பட்டியில் தொழில் பூங்கா அமைக்கப்படும் என்றார்.