நாகர்கோவில் நகரின் மையத்தில் உள்ள மணிகூண்டு. 
தமிழகம்

திமுக - பாஜக இடையே கடும் போட்டி: நாகர்கோவிலை கைப்பற்றப் போவது யார்?

எல்.மோகன்

நாகர்கோவிலில் திமுக, பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது. இங்கு எம்.ஆர்.காந்தியின் எளிமையான ஜென்டில்மேன் பிரச்சாரத்துக்கு ஈடுகொடுத்து, சுரேஷ்ராஜன் மீண்டும் இத்தொகுதியைக் கைப்பற்றுவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நாகர்கோவில் தொகுதியில் 2,69,394 வாக்காளர்கள் உள்ளனர். நாடார் சமுதாயத்தினர் அதிகம். வெள்ளாளர், விஸ்வகர்மா உட்பட பிற சமூகத்தினரும் பரவலாக உள்ளனர். ஜாதியைக் கடந்து, மதரீதியிலான வாக்குகளே இத்தொகுதியில் வெற்றியை முடிவு செய்கின்றன.

இத்தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ. திமுகவின் சுரேஷ்ராஜன் மீண்டும் களத்தில் உள்ளார். இந்த தேர்தலில் வேட்பாளர்கள் பலர் களத்தில் நின்றாலும் கடந்த முறை மும்முனை போட்டி நிலவிய நாகர்கோவில் தொகுதியில் திமுக, பாஜக இடையே தான் நேரடி போட்டி நிலவுகிறது. இங்கு கடந்த தேர்தலை போன்றே திமுகவின் சுரேஷ்ராஜனும், பாஜகவின் எம்.ஆர்.காந்தி யும் களத்தில் சந்திக்கின்றனர்.

இருவருமே அரசியல் அனுபவம் வாய்ந்த வேட்பாளர்கள். கடந்த தேர்தலில் கடும் போட்டிக்கு மத்தியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆன சுரேஷ்ராஜன், ஆளும் கட்சியில் இல்லாத நிலையில், தொடர் முயற்சிகள் மேற்கொண்டும் போதிய வளர்ச்சி திட்டங்களை மேற்கொள்ள இயலவில்லை. பாதாள சாக்கடை திட்டம், சாலைகள் சீரமைப்பு, நகரை சுத்தமாக வைத்தல் போன்றவற்றுக்காக பல போராட்டங்கள் மேற்கொண்ட போதும் பணியில் தொய்வு நீடிக்கிறது. 10 ஆண்டுகளாக தொடரும் பாதாள சாக்கடை திட்டம் நிறைவடையாமல் இழுபறி நீடித்து வருகிறது. மாநகராட்சியாக உயர்ந்துள்ள நாகர்கோவிலில் 52 வார்டுகளிலும் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு இன்றும் தொடர்கிறது. புத்தன்அணை குடிநீர் திட்டம் நடைமுறைக்கு வருவதில் காலதாமதம் ஆகி வருகிறது.

நாகர்கோவில் நகர்ப்பகுதியில் பரவலாக உள்ள கிறிஸ்தவ, இஸ்லாமிய வாக்குகள் சுரேஷ்ராஜனுக்கு பலம் சேர்ப்பவை. இவருக்கு போட்டியாக மீண்டும் களமிறங்கியுள்ள 74 வயதான எம்.ஆர்.காந்தி பாஜக மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களிடமும் நற்பெயர் பெற்றவர். காலில் செருப்பு கூட அணியாமல் தன்னுடன் வரும் ஒன்று இரண்டு பேரை வைத்தே வீடு வீடாகச் சென்று வாக்குகளை சேகரிக்கிறார். இவரது ஜென்டில்மேன் சென்டிமென்ட் மிகப்பெரிய பலமாக உள்ளது.

இந்துக்கள் மட்டுமின்றி கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களிலும் இவருக்கு வாக்களிப்போர் இருந்து வருகின்றனர். அதேநேரம் பல தேர்தலை சந்தித்த எம்.ஆர்.காந்தி குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலேயே தோல்வியை சந்தித்துள்ளார். இம்முறையாவது வெற்றி தன்பக்கம் திரும்புமா? என்ற நம்பிக்கையில் உள்ளார். கடந்த தேர்தலில் அதிமுகவுக்கு கிடைத்த கணிசமான வாக்கு இம்முறை கூட்டணி கட்சியான பாஜ க வசம் திரும்பும் என நம்புகிறார். சுரேஷ்ராஜனின் வெற்றி மீண்டும் தொடருமா? அல்லது எம்.ஆர்.காந்தியின் ஜென்டில்மேன் சென்டிமென்ட் வெற்றிபெறுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

          
SCROLL FOR NEXT