வேலூர், அரக்கோணம் பகுதி களில் குட்கா கடத்தியதாக 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா பொருட்கள் கடத்தலை தடுக்க திடீர் வாகன தணிக்கையில் ஈடுபட மாவட்ட காவல் கண் காணிப்பாளர் செல்வகுமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய் வாளர் செந்தில்குமார், உதவி காவல் ஆய்வாளர் ராஜசேகர் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் மாங்காய் மண்டி அருகே நேற்று அதிகாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, வேலூர் நோக்கி வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி வாகனத்தில் இருந்தவர்களிடம் விசாரித்தனர். அவர்கள், ‘பெங் களூருவில் இருந்து வேலூருக்கு பிஸ்கெட் பாக்கெட்டுகள் எடுத்து வருவதாக’ தெரிவித்தனர். சந்தேகத்தின்பேரில் வாகனத்தில் இருந்த அட்டை பெட்டிகளை பிரித்துப் பார்த்தபோது தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா பாக்கெட்டுகள் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து, வாகனத்தை பறிமுதல் செய்த காவல் துறையினர் இரண்டு பேரை கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் கர்நாடக மாநிலம் மைசூருவைச் சேர்ந்த விவேக்ராஜ் (28), ஜூனைத் கான் (22) என்று தெரியவந்தது. வாகனத்தில் 15 பெட்டிகளில் இருந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும், வேலூரில் யாருக்காக குட்கா பாக்கெட்டுகள் கடத்தி வரப்பட்டது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
அரக்கோணம்
அரக்கோணம் அடுத்த மாந்தோப்பு கிராமத்தில் உள்ள மினி லாரி ஒன்றில் குட்கா பார்சல் இருப்பதாக தக்கோலம் காவல் துறையினருக்கு நேற்று முன்தினம் இரவு தகவல் கிடைத்தது. அதன்பேரில் உதவி ஆய்வாளர் ராஜா தலைமையிலான காவலர்கள் விரைந்து சென்று வாகனத்தை சோதனை செய்ததில், சுமார் 4 டன் அளவுக்குதடை செய்யப்பட்ட குட்கா பான்மசாலா பார்சல் இருந்தது. பின்னர், வாகனத்துடன் குட்கா பார்சலை பறிமுதல் செய்த காவல் துறையினர், அரியலூர் மாவட்டம் உடையாளர்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த வாகன ஓட்டுநர் ரமேஷ் (39) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.