தமிழகம்

நீங்கள் கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்: கிண்டல் செய்த திமுகவினருக்கு குஷ்பு பதிலடி

செய்திப்பிரிவு

இணையத்தில் எழுந்த கிண்டல் பதிவுகளுக்கு, தனது ட்விட்டர் பதிவு மூலம் பதிலடிக் கொடுத்துள்ளார் குஷ்பு

முதலில் சேப்பாக்கம் தொகுதி தமக்கு ஒதுக்கப்படும் என்று தீவிர களப்பணி ஆற்றினார் குஷ்பு. ஆனால், அந்தத் தொகுதியை பாமக கட்சிக்கு ஒதுக்கியது அதிமுக. இதனைத் தொடர்ந்து குஷ்புவுக்கு ஆயிரம் விளக்கும் தொகுதி ஒதுக்கப்பட்டது.

தற்போது தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார் குஷ்பு. இது தொடர்பான புகைப்படங்களைத் தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ச்சியாக பதிவிட்டும் வருகிறார். தேர்தல் பிரச்சாரத்தில் பேசும்போது, "ஆயிரம் விளக்கு தொகுதிக்கு திமுக எம்.எல்.ஏ என்ன செய்தார்" என்று கேள்வி எழுப்பினார்.

இந்தப் பேச்சை முன்வைத்து குஷ்புவை இணையத்தில் பயங்கரமாகக் கிண்டல் செய்யத் தொடங்கினார்கள். ஏனென்றால் ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்.எல்.ஏ செல்வம் இப்போது பாஜகவில் இணைந்துவிட்டார். அவரும் குஷ்புவுடன் இணைந்து பிரச்சாரம் செய்து வருகிறார்.

குஷ்புவுடன் கு.க.செல்வம் இருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டு பலரும், இந்தக் கேள்வியை உங்கள் பக்கத்தில் இருப்பவரிடம் கேளுங்கள் என்று பதிவிடத் தொடங்கினார்கள். இந்தக் கிண்டல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் கிண்டல் செய்தவரின் ட்வீட்டைக் குறிப்பிட்டு குஷ்பு கூறியிருப்பதாவது:

"தம்பி, திமுக எதுவும் செய்யவில்லை, அவர்கள் கட்சியின் எம் எல் ஏக்களையும் எதையும் செய்ய அனுமதிப்பதில்லை ஏனென்றால் ஸ்டாலின் வெளிப்படையாகவே பாஜக அவர்களின் எதிரி, எதிர்க்கட்சி அல்ல என்று கூறி வருகிறார். அதனால் தான் கு க செல்வம் அண்ணா திமுகவை விட்டு விலகி பாஜகவில் இணைந்தார். எனவே நீங்கள் கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்"

இவ்வாறு குஷ்பு தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT