மதுரை தெற்கு தொகுதி திமுக கூட்டணியின் மதிமுக வேட்பாளர் பூமிநாதனை ஆதரித்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மதுரை செல்லூரில் இன்று தேர்தல் பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு நான்கு கோபுரங்கள் உள்ளன. அதில் தெற்கு கோபுரம்தான் 160 அடி 9 அங்குலம் உயரமுடைய சிறப்புக்குரியது.
அதேபோல், 22 பாண்டிய மன்னர் குடும்பங்களில் உள்ள பூமியன் என்ற மன்னரும் இருந்துள்ளார். அதேபோல் தெற்கு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பெயரும் பூமிநாதன். இது இயற்கையாக அமைந்துள்ளது.
தமிழகத்தில் முதல்வர் பழனிசாமியின் தலைமையில் ஊழல் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. நீட் தேர்வு தமிழகத்திற்கு வராது, சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம் என அதிமுக அரசு பொய்யைப் பரப்பியதை நம்பி அனிதா உள்ளிட்ட 14 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மாணவர்களின் தற்கொலைக்கு அதிமுக அரசுதான் காரணம்.
அதிமுக ஆட்சியில் உள்ளவர்களுக்கு பொள்ளாச்சியில் நடந்த பாலியல் பலாத்காரத்தில் தொடர்புள்ளது. அதில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபட்ட 13 பேரை கொடூரமாக சுட்டுக்கொலை செய்தவர்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும்.
அதற்கு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும். தமிழக முதல்வர் பழனிசாமியின் உறவினர்கள், பினாமிகளுக்கு பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறையில் வேலைகளுக்கு டெண்டர் வழங்கியதில் 6 ஆயிரம் கோடி ஊழல், வருமானத்தற்கு அதிகமாக 200 கோடி வரையில் சொத்து சேர்த்துள்ளார்.
மேலும் துணை முதல்வர் உள்ளிட்ட 8 அமைச்சர்களின் ஊழல் பட்டியலை திமுக தலைவர் ஸ்டாலின் ஆளுநரிடம் புகார் மனு அளித்துள்ளார். அதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.
அதிமுக அரசில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடந்துள்ளது. திமுக ஆட்சி அமைந்ததும் அதிமுக அமைச்சர்கள் எல்லாம் சிறைக்குச் செல்லும் நிலை வரும்.
இது ஜனநாயகத்திற்கும் பணநாயகத்திற்கும் நடைபெறும் தேர்தல். இதில் ஜனநாயகம் வெற்றி பெறும். மக்கள் விழிப்படைந்துவிட்டார்கள்.
தேர்தல் கமிஷன் இந்தத் தேர்தலில் 19 வயதிலிருந்து 28 வயது வரையுள்ள இளைஞர்கள் சுமார் 1 கோடியே 33 லட்சத்து 7 ஆயிரத்து 79 பேர் வாக்களிக்கவிருப்பதாக தெரிவித்துள்ளது. இந்தத் தேர்தலில் இளைஞர்கள் கூட்டம்தான் முடிவெடுக்கப்போகிறது.
இதில் சுமார் 90 லட்சம் பேருக்கு வேலையில்லை. அத்தகைய இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் வகையில் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் திருத்தம் செய்துள்ளது.
தமிழக இளைஞர்களுக்கு துரோகம் செய்யும் வகையில் அதிமுக அரசு நயவஞ்சகம் செய்துள்ளது. தமிழகத்திற்கு மோசடி செய்துள்ளது. தமிழ்நாட்டிற்கு கேடு செய்யும் திட்டங்களை அதிமுக அரசு நிறைவேற்றியுள்ளது.
எனவே தமிழக இளைஞர்கள், வருங்கால சந்ததியினர் நலமோடு வாழ்வதற்கு மதச்சார்பற்ற கூட்டணியை ஆதரிக்க வேண்டும். மதுரை தெற்கு தொகுதியில் வேட்பாளர் பூமிநாதனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.