தமிழகம்

காய்ச்சல் இருக்கும் ஊழியர்கள் அலுவலகத்துக்குச் செல்லக்கூடாது; மருத்துவப் பரிசோதனைக்குச் செல்லுங்கள்: சுகாதாரத்துறைச் செயலர் பேட்டி

செய்திப்பிரிவு

கரோனா தொற்று விவகாரத்தில் தனியார் நிறுவனங்கள், ஊழியர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.

தற்போது, சென்னை மாநகரில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. தொற்றைத் தடுக்க சென்னை மாநகராட்சி, சுகாதாரத்துறை சார்பில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சென்னை பெருங்குடியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் 2 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதைத் தொடர்ந்து, தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களைக் கண்காணித்து, அங்கு வேலை பார்க்கும் ஊழியர்களை சென்னை மாநகராட்சியினர் பரிசோதனை செய்தனர்.

அந்த நிறுவனத்தின் கிளைகள் தரமணி, பெருங்குடி, கந்தன்சாவடி ஆகிய பகுதிகளில் உள்ளன. அங்கு வேலை பார்க்கும் ஊழியர்களை, மாநகராட்சி சுகாதாரத் துறையினர் பரிசோதனை செய்தபோது, அவர்களில் 40 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரியவந்தது.

இதையடுத்து அந்த நிறுவனத்தைத் தற்காலிகமாக மூட சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. அங்கு பணியாற்றும் 364 ஊழியர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன், நிறுவனங்கள், ஊழியர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து எச்சரித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் சுகாதாரத்துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

“சென்னையில் ஒரே நிறுவனத்தின் 3 கிளைகளில் 40 பேருக்கு கரோனா தொற்று வந்தது குறித்த விசாரணையில் ஒருவருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டு அவர் பரிசோதனை செய்யாமல் அடுத்தடுத்த கிளைகளுக்கும் சென்றதால் மூன்று கிளைகளிலும் பரவிவிட்டது எனத் தெரியவந்துள்ளது. மற்ற நிறுவனங்களுக்கும் இது ஒரு எச்சரிக்கை. அந்த நிறுவனத்தில் 364 ஊழியர்களைப் பரிசோதனை செய்துள்ளார்கள்.

மூவ்மெண்ட் ரிஜிஸ்டர் போடுவது மட்டுமல்ல, பேரிடர் மேலாண்மைத் துறையில் நிலையான வழிமுறைகள் உள்ளன. அதைப் பின்பற்ற வேண்டும். ஊழியர்களுக்குக் காய்ச்சல் இருந்தால் அலுவலகம் செல்லக்கூடாது. மருத்துவமனைக்குத்தான் போக வேண்டும். பரிசோதனை செய்ய வேண்டும். தெர்மல் சோதனையில் உடல் வெப்பம் (டெம்ப்ரேச்சர்) அதிகமாக இருந்தால் உடனடியாகப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்”.

இவ்வாறு ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT