சோழிங்கநல்லூர் பகுதியின் நீண்டநாள் கோரிக்கைகளை நிறைவேற்ற, வேட்பாளர்கள் வாக்குறுதி அளிப்பார்களா என மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
சோழிங்கநல்லூர் பகுதி அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாகும். ஐடி நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன. இங்கு சென்னை மாநகராட்சி மற்றும் சில ஊராட்சிகளையும் உள்ளடக்கியது இந்தத் தொகுதி. பெரும்பாக்கம், செம்மஞ்சேரி ஆகிய பகுதியில் ஏராளமான அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் அரசின் குடிசை மாற்று குடியிருப்புகள் உள்ளன. ஆரம்ப சுகாதார நிலையம் மட்டுமே உள்ளது. பெரிய மருத்துவமனை இல்லை. மேடவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தை மருத்துவமனையாகத் தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாவே உள்ளது.
மேலும், உள்ளகரம் புழுதிவாக்கத்தில் பல ஆண்டுகள் ஆகியும் பாதாள சாக்கடை திட்டம் முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை. குடிநீர் திட்டமும் அப்படியே உள்ளது. சோழிங்கநல்லூர் சந்திப்பில் மேம்பாலம் அமைக்கவேண்டும், கிழக்கு கடற்கரை சாலை மற்றும் ராஜீவ் காந்தி சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும். மழைக்காலங்களில் செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இதற்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும். மேலும் நீர்நிலைகளைப் பாதுகாக்க வேண்டும். போக்குவரத்து நெரிசல்களுக்குத் தீர்வு காண வேண்டும்.
கோயில் இடங்கள், அரசு புறம்போக்கு இடங்களை ஆக்கிரமித்து பட்டா போடப்பட்டது. பரந்து விரிந்த தெருக்கள் இன்று சுருங்கி, பொதுமக்கள் நடப்பதற்கு இடம் இல்லாமல் போய்விட்டது. பெருகிவிட்ட வாகனப் போக்குவரத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் மக்கள் சிக்கித் தவிக்கின்றனர்.
பெரும்பாக்கம், நன்மங்கலம், கோவிலம்பாக்கம், மேடவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளைத் தரம் உயர்த்த வேண்டும், இங்கு பாதாள சாக்கடை திட்டமும் செயல்படுத்த வேண்டும். இதுபோன்ற எண்ணற்ற கோரிக்கைகளை வேட்பாளர்கள் நிறைவேற்ற வாக்குறுதி அளிப்பார்களா, வெற்றி பெற்றால் வாக்குறுதியை நிறைவேற்றுவார்களா என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர்.
இங்கு திமுக சார்பில் அரவிந்த் ரமேஷ், அதிமுக சார்பில் கே.பி.கந்தன், நாம் தமிழர் ச.மைக்கேல் வின்சென்ட் சேவியர், அமமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளர் முருகன், மநீம சார்பில் ராஜீவ்குமார் ஆகிய முக்கிய வேட்பாளர்கள் உள்ளிட்ட 26 பேர் போட்டிக் களத்தில் உள்ளனர்.