சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை, மகன் கொலையான வழக்கில் சார்பு ஆய்வாளர்கள் மற்றும் 3 காவலர்களின் ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சாத்தான்குளம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட வியாபாரி ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள், சிறப்ப சார்பு ஆய்வாளர் மற்றும் காவலர்கள் என 9 பேரை சிபிஐ கைது செய்தது. இவர்கள் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறது. இந்த நீதிமன்றத்தில் சிபிஐ சில வாரங்களுக்கு முன்பு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. ஸ்ரீதர் உட்பட 9 பேர் மீது குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து விசாரணையை 6 மாதத்தில் முடிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ், காவலர்கள் முருகன், முத்துராஜா, தாமஸ் ஃபிரான்சிஸ் ஆகியோர் ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு பின்னர் தற்போதைய சூழ்நிலையில் மனுதாரர்களுக்கு ஜாமீன் வழங்க முடியாது. ரகுகணேஷ் உட்பட 4 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதிபதி உத்தரவிட்டார்.