புதுச்சேரி பாரதி பூங்காவில் உள்ள புதுச்சேரி அரசு சின்னமான ஆயி மண்டபம் மற்றும் கோலாஸ் நகரில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
புதுச்சேரி ஒயிட் டவுன் பகுதியில் உள்ள பாரதி பூங்காவில் ஆயி மண்டபம் அமைந்துள்ளது. இது புதுச்சேரி அரசு சின்னமாகும். வரலாற்றுச் சிறப்புவாய்ந்த இந்த மண்டபம் போதிய பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்து காணப்படுகிறது. இதனைச் சீரமைக்க வேண்டுமெனக் கோரிக்கைகள் எழுந்தன.
இதையடுத்து, பொதுப்பணித்துறை சார்பில் ரூ.15 லட்சம் செலவில் ஆயி மண்டபத்தைச் சீரமைக்கும் பணி தொடங்கியுள்ளது. இந்நிலையில் இன்று (மார்ச் 22) பாரதி பூங்காவுக்கு வந்த ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், ஆயி மண்டபத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, பூங்காவையும், ஆயி மண்டபத்தையும் முறையாகப் பராமரிக்காதது குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். உடனே அதிகாரிகள், ஆயி மண்டபம் ரூ.15 லட்சம் செலவில் புதுப்பிக்கும் பணியைத் தொடங்கியுள்ளதாகவும், மே மாதத்திற்குள் பணிகள் முடிக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.
கூடுதலாக ஒரு மாதம் ஆனாலும் பரவாயில்லை. மண்டபத்தைச் சிறப்பான முறையில் புதுப்பிக்க வேண்டும். மேலும், பூங்காவையும் நன்றாகப் பராமரிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு ஆளுநர் அறிவுறுத்தினார்.
பின்னர் அங்கிருந்து ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் புறப்படும்போது, பூங்காவில் வேலை செய்யும் பெண்கள் நகராட்சி ஊழியர்களான தங்களுக்கு ஊதியம் சரிவர வழங்கப்படுவதில்லை. இதனால் பூங்காவில் வேலை செய்யும் 15 பேர் உட்பட மொத்தம் 235 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மாதந்தோறும் ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.
ஒவ்வொரு துறையில் உள்ள பிரச்சினையையும் கேட்டறிந்து சரி செய்து வருகிறேன். உங்களுடைய பிரச்சினையைச் சரி செய்து நடவடிக்கை எடுப்பேன் என ஆளுநர் உறுதியளித்தார்.
இதையடுத்து, கோலாஸ் நகரில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்குச் சென்ற ஆளுநர் அங்கு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது ஆளுநரின் ஆலோசகர் ஆனந்த் பிரகாஷ் மகேஸ்வரி, உள்ளாட்சித்துறைச் செயலர் வல்லவன், பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் மகாலிங்கம் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.