எஸ்.என்.சிக்கந்தர் 
தமிழகம்

பாஜகவுடன் அதிமுக கூட்டணி கூடாநட்பு கேடாய் முடியும்: ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கருத்து

ஜெ.ஞானசேகர்

பாஜகவுடன் கூட்டணி சேர்ந்துள்ள அதிமுகவுக்கு, கூடாநட்பு கேடாய் முடியும் என்ற பாடத்தை தமிழ்நாட்டு மக்கள் இந்தத் தேர்தலில் அளிப்பார்கள் என்று ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் மாநிலச் செயலாளர் எஸ்.என்.சிக்கந்தர் கூறினார்.

திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் எஸ்.என்.சிக்கந்தர் கூறியது:

ஆட்சிக்கு வர வேண்டியவர்கள் வகுப்புவாதிகளும் அதற்குத் துணையாக இருப்பவர்களுமா? அல்லது மதச்சார்பற்றவர்களா?, மக்கள் நலனைப் பேணுபவர்களா? அல்லது மக்கள் நலனைப் புறக்கணித்து, மக்கள் விரோதச் சட்டங்களை இயற்றுவோரும் மற்றும் அதற்குத் துணையாக இருப்பவர்களுமா? என்ற கேள்விகளை முன்வைத்துத்தான் இந்தத் தேர்தல் நடைபெறுகிறது.

புதிய கல்விக் கொள்கை, நீட் தேர்வு, ஜிஎஸ்டி வரி விதிப்பு, பெட்ரோல்- டீசல்- காஸ் விலை உயர்வு, பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயம் உட்பட மத்திய அரசு கொண்டு வரும் அனைத்துத் திட்டங்களையும் ஏன்?, எதற்கு? என்று எந்தக் கேள்வியும் கேட்காமல்- சிறு எதிர்ப்பைக்கூட காட்டாமல் அப்படியே அதிமுக அரசு நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. மேலும், அதைப் பெருமையாகவும் அதிமுகவினர் பேசி வருகின்றனர்.

இந்தச்சூழலில் சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டோர் உட்பட அனைத்துத் தரப்பினரையும் கொண்டுள்ள திமுக தலைமையிலான மதச்சார்பற்ற அணி வலிமை பெற வேண்டியது அவசியம்.

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற அணிகளைச் சேர்ந்தவர்கள் எங்களைச் சந்தித்து தேர்தலில் ஆதரவு கோரினர். அப்போது, நாங்கள் வைத்த 20 கோரிக்கைகளைத் தேர்தலில் வென்று நிறைவேற்றுவதாக உறுதி அளித்தனர். அதனடிப்படையில் எங்களது அமைப்பின் மாநிலச் செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு எங்கள் ஆதரவை அளிக்கிறோம்.

இந்தத் தேர்தலில் சிறுபான்மையின கட்சிகள், அமைப்புகள் தனியாக போட்டியிட்டால் விகிதாசாரத்தை நிரூபித்துவிட முடியும். ஆனால், தேர்தலில் வென்று யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதைவிட, யார் வரக் கூடாது என்பதில் சிறுபான்மையின மக்கள் தெளிவாக உள்ளனர். பாஜகவுடன் கூட்டணி சேர்ந்துள்ள அதிமுகவுக்கு, கூடாநட்பு கேடாய் முடியும் என்ற பாடத்தை தமிழ்நாட்டு மக்கள் இந்தத் தேர்தலில் அளிப்பார்கள்.

உத்தரப்பிரதேசம், ஒடிசா போன்ற வட மாநிலங்களில் சிறுபான்மையின மக்களின் பிரச்சினைகளைப் பேசவும்- வகுப்புவாதிகளை எதிர்த்து குரல் கொடுக்கவும் யாரும் இல்லை. எனவே, அங்கு ஓவைசிகள் தேவைப்படுகின்றனர்.

ஆனால், தமிழ்நாட்டில் சிறுபான்மையினருக்கு இணக்கமான சூழல் உள்ளது. எனவே, தமிழ்நாட்டில் ஓவைசிகளுக்கு வேலை இல்லை என்றார்.

செய்தியாளர் சந்திப்பின்போது ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் மாவட்டச் செயலாளர் சாகுல் அமீது, மக்கள் தொடர்பு அலுவலர் ஹைதர் அலி, இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பின் திருச்சி மாவட்டத் தலைவர் முகம்மது ஜாபர், வெல்பேர் பார்ட்டி ஆப் இந்தியா கட்சியின் திருச்சி மாவட்டத் தலைவர் கனி, மாவட்டத் தலைவர் சாதிக்பாட்சா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT