தமிழகம்

தேர்தல் பிரச்சாரத்தில் அதிகாரிகளை மிரட்டும் தொனியில் பேச்சு: செந்தில் பாலாஜி மீது 6 பிரிவுகளில் வழக்கு

செய்திப்பிரிவு

ஆட்சிக்கு வந்த அடுத்த நிமிடம் ஆற்றில் மாட்டு வண்டிகளை இறக்குங்கள். அதிகாரிகள் தடுத்தால் அவர் அங்கு பணியில் இருக்கமாட்டார் என மணல் கொள்ளையை ஊக்குவிக்கும் வகையிலும், அதிகாரிகளை மிரட்டும் தொனியிலும் பேசியதாக கரூர் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

கரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த சில நாட்களுக்கு முன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், “11 மணிக்கு ஸ்டாலின் முதல்வராவார். 11.10 மணிக்கு ஆற்றில் மாட்டு வண்டிகளை இறக்குங்கள். எந்த அதிகாரி தடுப்பார் என்று பார்க்கலாம். தடுக்கும் அதிகாரி அங்கு பணியில் இருக்க மாட்டார்” எனப் பேசினார்.

இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலானது. செந்தில் பாலாஜியின் பேச்சைப் பலரும் கண்டித்தனர். அதிமுக சார்பில், செந்தில் பாலாஜி மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதில், அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்ததாகவும், மணல் கொள்ளையை ஊக்குவிப்பதாகவும், பொதுமக்களைத் தவறான வழியில் சட்டத்தைக் கையிலெடுக்கச் சொல்லித் தூண்டியதாகவும், உயர் நீதிமன்ற ஆணையை மீறும் வகையில் பேசியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதன் பேரில் செந்தில் பாலாஜி மீது அதிகாரிகளை மிரட்டுவது, பணி செய்ய விடாமல் தடுப்பது, பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பது உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் கரூர் நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

SCROLL FOR NEXT