தமிழகம்

சர்வாதிகார ஆட்சி முறையால் மட்டுமே ஒரு தேசத்தை வளர்த்தெடுக்க முடியும்: சீமான் பேச்சு

செய்திப்பிரிவு

தன்னலமற்ற, அன்பான, சர்வாதிகார ஆட்சி முறையால் மட்டுமே ஒரு தேசத்தை வளர்த்தெடுக்க முடியும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் வேட்பாளர்களுக்காக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் சீமான் பேசும்போது, ''வலிமையான ஆயுதம் ஓட்டு. நாம் நோட்டை வாங்கிக் கொண்டு ஓட்டை விற்கிறோம். அவர்கள் நாட்டை விற்கிறார்கள். ஊழலை ஒழிக்க வேண்டும் என்று நாம் அனைவரும் பேசுகிறோம். ஆனால், யார் கொடுக்கிறார்கள், வாங்குகிறார்கள்? ஊழலைச் சட்டம் போட்டுத் திருத்த முடியாது. ஒவ்வொருவரும் திருந்த வேண்டும்.

என் கையில் ஆட்சி வந்துவிட்டால் என் ஆட்சியில் ஊழல் செய்தால் பணியிட மாற்றம், தற்காலிகப் பணி நீக்கம் எல்லாம் கிடையாது. நேரடியாக டிஸ்மிஸ்தான். பத்து தலைமுறைகளுக்கு அவர்களுக்கு அரசுப் பணி கிடைக்காது.

குப்பையை அதற்குரிய இடங்களில் கொட்ட வேண்டும். நீங்கள் மாடியிலிருந்து கொட்டினால் அங்கு சிசிடிவி கேமரா வைத்து கண்காணிக்கப்பட்டு உங்கள் நீர் இணைப்பு, மின்சார இணைப்பு ஆகியவை நிறுத்தப்படும். நீங்கள் குடியுரிமையை இழந்துவிட்டீர்கள் என்று கூறப்படும். இறங்கி வந்துதான் குப்பைகளைக் கொட்ட முடியும். இப்படி இல்லை என்றால் செதுக்க முடியாது. தன்னலமற்ற, அன்பான, சர்வாதிகார ஆட்சி முறையால் மட்டுமே ஒரு தேசத்தை வளர்த்தெடுக்க முடியும்” என்று பேசினார்.

SCROLL FOR NEXT