தேன்கனிக்கோட்டை வனச்சரகத்தில் உள்ள காப்புக் காடுகளில் வாழும் விலங்குகளுக்குக் கோடை காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் வனத்தில் உள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
ஓசூர் வனக்கோட்டத்தில் ஓசூர், தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, உரிகம், ராயக்கோட்டை, ஜவளகிரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 7 வனச்சரகங்கள் அமைந்துள்ளன. இதில் தேன்கனிக்கோட்டை வனச்சரகத்தில் அய்யூர் காப்புக்காடு, தொலுவபெட்டா, நொகனூர், குல்லட்டி, கெம்பகரை உட்பட 18 காப்புக்காடுகள் உள்ளன. இந்தக் காப்புக்காடுகளில் யானை, சிறுத்தை, கரடி, காட்டெருமை, மான், முயல் உள்ளிட்ட பல்வேறு வகை வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
இந்த வனவிலங்குகளின் குடிநீர் தேவைக்காக ஏற்கெனவே வனத்தில் அமைந்துள்ள 100க்கும் மேற்பட்ட இயற்கையான ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளுடன், வனத்துறை சார்பில் ஒவ்வொரு காப்புக்காட்டிலும் செயற்கையான தண்ணீர் தொட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது கோடை காலத்தின் ஆரம்பக் கட்டத்திலேயே தேன்கனிக்கோட்டை வனச்சரகத்தில் கடும் வெயில் காரணமாகத் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் வனவிலங்குகளின் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் தொட்டிகளில் குடிநீர் நிரப்பும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து தேன்கனிக்கோட்டை வனச்சரகர் சுகுமார் கூறும்போது, ''கடந்த ஒரு மாத காலத்துக்கும் மேலாக கடும் வெயில் காரணமாக வனத்தில் வறட்சி ஏற்பட்டுள்ளது. வனத்தில் உள்ள நீர்நிலைகள் வேகமாக வற்றி வருகின்றன. வனவிலங்குகளின் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் மாவட்ட வன அலுவலர் பிரபு உத்தரவின்படி முதல் கட்டமாக அய்யூர் காப்புக்காட்டில் உள்ள தொட்டிகளிலும், தொலுவபெட்டா காப்புக்காட்டில் உள்ள தொட்டிகளிலும் டிராக்டர் மூலமாக தண்ணீர் நிரப்பும் பணி கடந்த ஒரு வார காலமாக நடைபெற்று வருகிறது.
இதனிடையே காப்புக்காடுகளில் சேதமடைந்துள்ள தொட்டிகளைச் சீரமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காப்புக் காடுகளில் உள்ள தொட்டிகளில் தண்ணீர் குறையக் குறைய, தொடர்ந்து தண்ணீர் நிரப்பும் பணி கோடைக் காலம் முழுவதும் நடைபெற உள்ளது. இதன் மூலமாக வனவிலங்குகள் தண்ணீர் தேடி காப்புக் காடுகளை விட்டு வெளியேறுவது தடுக்கப்படும்'' என்று தெரிவித்தார்.