தமிழகம்

கோவனை 2 நாள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

செய்திப்பிரிவு

பாடகர் கோவனை 2 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க சென்னை பெரு நகர தலைமை குற்றவியல் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கி உத்தரவிட்டது.

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் ‘மக்கள் அதிகாரம்’ அமைப்பின் பாடகர் கோவன்-ஐ சென்னை மத்தியக் குற்றப் பிரிவு சைபர் கிரைம் போலீஸார் அக்டோபர் 30-ம் தேதி அதிகாலை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். மதுவிற்கு எதிராக பாட்டுப் பாடி வந்த இவர் மீது தேசத் துரோகம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இவரை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை பெருநகர தலைமைக் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சைபர் கிரைம் போலீஸார் மனு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக சில முக்கிய தகவல்களை திரட்ட கோவனிடம் விசாரணை நடத்த வேண்டும் என போலீஸ்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு கோவன் மற்றும் அவரது வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகி போலீஸ் கஸ்டடி எடுத்து விசாரிப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் மீதான விசாரணை புதன்,வியாழன் ஆகிய 2 நாட்கள் நடைபெற்றது.

இதையடுத்து இருதரப்பு வாதங்களையும் கேட்டபெருநகர தலைமை குற்றவியல் நடுவர் எஸ்.கணேசன் இன்று தீர்ப்பு வழங்கினார். கோவனை 2 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கியும், விசாரணையின்போது தினமும் 2 முறை கோவனை அவரது வழக்கறிஞர்கள் சந்திக்க போலீஸார் அனுமதிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து போலீஸார் கோவனை நீதிமன்றத்திலிருந்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

SCROLL FOR NEXT