தமிழகம்

பொய் வாக்குறுதிகளால் மக்களை ஏமாற்றும் திமுக: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

திமுகவினர் பொய் வாக்குறுதிகளால் மக்களை ஏமாற்றுவதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.

வால்பாறை சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் அமுல் கந்தசாமியை ஆதரித்து, நா.மூ.சுங்கம் பகுதியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:

அதிமுக ஆட்சியில் அனைத்துத்தரப்பு மக்களுக்குமான நலத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால், திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுக ஆட்சியை குறைகூறி, பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

கடந்த மக்களவைத் தேர்தலின்போது நிறைவேற்ற முடியாத பொய் வாக்குறுதிகளை கூறி, மக்களை ஏமாற்றி திமுகவினர் அதிக இடங்களைக் கைப்பற்றினார். ஆனால், திமுக எம்.பி.க்கள் மக்களுக்காக எதுவுமே செய்யவில்லை. அவர்கள்தொகுதி பக்கம் வருவதே இல்லை. தேர்தல் நேரத்தில் இவ்வாறு பொய் வாக்குறுதிகளைக் கூறி வெற்றிபெற்று, மக்களை ஏமாற்றுவதையே திமுக தலைவர் ஸ்டாலினும், அவரது கட்சியினரும் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். எனவே, பொதுமக்கள் திமுகவின் பொய் வாக்குறுதிகளை நம்பி ஏமாறாமல், மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றும் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.

தொண்டாமுத்தூரில் பிரச்சாரம்

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று சுண்டக்காமுத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களிடம் வாக்குசேகரித்தார். அப்போது அவர், அதிமுக அரசு மக்களுக்கு செய்துள்ள நன்மைகள்,நலத் திட்டங்களை விளக்கியும்,வெற்றி பெற்றால் நிறைவேற்றக்கூடிய திட்டங்கள் குறித்தும் விளக்கினார்.

SCROLL FOR NEXT