தேன்கனிக்கோட்டை வனச்சரகத் தில் உள்ள காப்புக் காடுகளில் வாழும் விலங்குகள், தண்ணீருக்காக காடுகளை விட்டு வெளியேறாமல் தடுக்கும் வகையில் வனத்தில் உள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரம்பும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேன்கனிக்கோட்டை வனச் சரகத்தில் அய்யூர் காப்புக்காடு, தொலுவபெட்டா, நொகனூர், குல்லட்டி, கெம்பகரை உட்பட 18 காப்புக் காடுகள் அமைந்துள்ளன. இவற்றில் வாழும் யானை உள்ளிட்ட வன விலங்குகளின் குடிநீர் தேவைக்காக, வனத்தில் அமைந்துள்ள இயற்கையான ஏரி, குளம் உள்ளிட்ட நீர் நிலைகளுடன், வனத்துறை சார்பில் செயற்கையான தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.
தற்போது கோடை காலத்தின் ஆரம்ப கட்டத்திலேயே தேன்கனிக் கோட்டை வனச் சரகத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் வன விலங்குகளின் தண்ணீர் தேவைக்காக, தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இதுதொடர்பாக தேன்கனிக் கோட்டை வனச்சரகர் சுகுமார் கூறியதாவது:
கடும் வெயில் காரணமாக வனத்தில் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் வன விலங்குகளின் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் மாவட்ட வன அலுவலர் பிரபு உத்தரவின்படி முதல் கட்டமாக அய்யூர் காப்புக்காட்டில் உள்ள 5 தொட்டிகளிலும், தொலுவபெட்டா காப்புக் காட்டில் உள்ள ஒரு பெரிய தொட்டி மற்றும் 6 சிறிய தொட்டிகளிலும் டிராக்டர் மூலமாக தண்ணீர் நிரப்பும் பணி கடந்த ஒரு வார காலமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே காப்புக் காடுகளில் சேதமடைந்துள்ள தொட்டிகளை சீரமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
காப்புக்காடுகளில் உள்ள தொட்டிகளில் தண்ணீர் குறையக் குறைய தொடர்ந்து தண்ணீர் நிரப்பும் பணி கோடை காலம் முழுவதும் நடைபெற உள்ளது. இதன் மூலமாக வனவிலங்குகள் தண்ணீர் தேடி காப்புக் காடுகளை விட்டு வெளியேறுவது தடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.