மாநில உரிமைகளை மத்தியில் ஆளும் கட்சியிடம் பறிகொடுத்து விட்டு, அவர்களுக்கு திராவிடக் கட்சிகள் ஆதரவு கொடுத்து வருவதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டினார்.
நாம் தமிழர் கட்சி சார்பில் போடி தொகுதியில் பிரேம்சந்தர், கம்பம் தொகுதியில் அனீஸ் பாத்திமா ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவர்களை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் போடியில் பேசியதாவது:
மாநிலத்தின் எல்லா உரிமைகளையும் மத்தியில் ஆளும் தேசியக் கட்சியிடம் பறி கொடுத்துவிட்டு அவர்களுக்கு திராவிடக் கட்சிகள் ஆதரவு கொடுத்து வருகின்றன. வேலைவாய்ப்பு, தொழில் காரணமாக தமிழகத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட வட இந்தியர்கள் குடிபெயர்ந்துள்ளனர். இவர்களிடம் இருந்து உங்களை தற்காத்துக் கொள்ளுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
மதுரை
திருமங்கலம் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சாராளை ஆதரித்து சீமான் பேசியதாவது:
மொழி, கலை, கலாச்சாரத்தை இளைய தலைமுறையினருக்குப் பாதுகாப்பாக வைத்துவிட்டுச் செல்ல வேண்டியது நமது கடமை.
உலகில் அதிக நீர் உறிஞ்சும் நாடு இந்தியா. நீரை உறிஞ்சி விற்கும் மாநிலம் தமிழகம். எங்களை ஆதரித்தால் மாற்றம் கொண்டு வருவோம்.
நகைக் கடன் தள்ளுபடி செய்வது சரி. ஏன் நகைகளை அடமானம் வைத்தோம். வறுமையால் தானே. இந்த தேசத்தை வறுமையில் வைத்துவிட்டு, விவசாய கடன் தள்ளுபடி செய்யும் இந்தக் கட்சிகளை நாம் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று பேசினார்.