புதுப்பிக்கப்பட்ட நவீன ரயில் பெட்டி. 
தமிழகம்

நவீன குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி ரயில் அறிமுகம்: மாற்றுத் திறனாளிகள் சக்கர நாற்காலியுடன் நுழையும் வசதி

செய்திப்பிரிவு

ரயில் பயணிகள் வசதிக்காக நவீன குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகளை கபூர்தலாவில் உள்ள ரயில் பெட்டி தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் மின்சாதனங்கள் பொருத்தப்படும் இடங்கள் குறைக்கப்பட்டு, பயணிகள் பயன்படுத்தும் இடம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

குளிர்சாதன வசதி பெட்டியில் தற்போதைய அளவான 64 படுக்கைகளில் இருந்து 83 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. ரயில் பெட்டியின் நுழைவு வாயில், கழிப்பறைகள் மாற்றுத் திறனாளிகள் சக்கர நாற் காலியுடன் நுழையும் வசதி செய் யப்பட்டுள்ளது.

குளிர்சாதன வசதியை அதிகரிக்க, குறைக்க ஒவ்வொரு படுக்கை அருகிலும் தனி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. படுக்கைகள் நவீன மயமாக்கப்பட்டு, எடை குறைத்து பயன்பாட்டுக்குக் கொண்டு வரப் பட்டுள்ளது.

ஒவ்வொரு படுக்கைக்கும் தனித் தனி விளக்கு, மொபைல் போன் சார்ஜ் செய்யும் வசதி உள்ளன. மேல் உள்ள படுக்கைக்கு செல்ல நவீன ஏணி பொருத்தப்பட்டுள்ளது. பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு நடு மற்றும் மேல் படுக்கைகளுக்கான இடைவெளி அதிகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்திய, மேற்கத்திய நவீன கழிப்பறைகள் அமைக்கப் பட்டுள்ளன. இரவு நேரங்களில் படுக்கைகளை அறிந்து கொள்ள வழிப்பாதையில் ஒளியூட்டப்பட்ட எண்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த நவீன ரயில் பெட்டிகள் ராஜதானி, சதாப்தி, துரந்தோ ஆகிய சிறப்பு ரயில்களைத் தவிர மற்ற ரயில்களில் படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும் என அதி காரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT