தமிழகம்

திருப்பூர் அருகே 2 இடங்களில் ரயில் பாதையில் விரிசல்: பெரும் விபத்து தவிர்ப்பு

செய்திப்பிரிவு

திருப்பூர் அருகே ரயில் பாதையில் ஏற்பட்ட விரிசலை ஓட்டுநர் கண்டறிந்ததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

திருப்பூர் - ஊத்துக்குளி ரயில் நிலையங்களுக்கு இடையே திம்மநாயக்கன் பாளையம் ரயில்வே மேம்பாலம் அருகே நேற்று காலை தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அப்போது, அந்த வழியாக வந்த சென்னை - கோவை எக்ஸ்பிரஸ் ரயில் ஓட்டுநருக்கு, இருப் புப் பாதையில் வித்தியாசமான சத்தம் கேட்டதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக, திருப்பூர் ரயில் நிலையத்துக்கு அவர் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்துக்குச் சென்று ஊழியர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பதை கண்டறிந்தனர்.

சேலம் கோட்ட அலுவலகத்துக்கு, ரயில்வே ஊழியர்கள் தகவல் அளித் தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக காலை 6.30 மணிக்கு அந்த வழியாக வந்த நாகர்கோவில் - கோவை எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தப்பட்டது. சேலம் கோட்ட அலுவலகத்தின் அறிவுரைப் படி, 10 கி.மீ. வேகத்தில் ரயில் இயக்கப் பட்டது.

இதைத் தொடர்ந்து, இளநிலை பொறியாளர் எம்.மோகன் தலைமையில் டிராக்மேன் மற்றும் ஊழியர்கள் மாலை வரை இருப்புப் பாதை சீரமைப்புப் பணியில் ஈடுபட்டனர்.

இதனால், அப்பகுதியில் 10 மணி நேரத்துக்கு குறைந்த வேகத்தில் ரயில்கள் இயக்கப்பட்டன.

ரயில்வே துறையினர் கூறும்போது, “குளிர்காலத்தில் இருப்புப் பாதையில் ஏற்படும் பிரச்சினைதான். இதேபோல், ஈங்கூர் பகுதியிலும் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அங்கும் சீரமைப்புப் பணிகள் செய்து முடிக்கப்படும்” என்றனர்.

SCROLL FOR NEXT