தூத்துக்குடி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட அதிமுக நிர்வாகிகளுடன் தமாகா வேட்பாளர் எஸ்டிஆர் விஜயசீலன் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் ஆலோ சனையின் பேரில் தூத்துக்குடி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட அதிமுக வார்டு செயலா ளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட துணைச் செயலாளர் சந்தனம் தலைமையில், முன்னாள் வாரியத்தலைவர் அமிர்தகணேசன் முன்னிலையில் நடைபெற்றது.
கூட்டத்தில் வேட்பாளர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் தேர்தல் பணி குறித்தும், பிரச்சாரம் மேற்கொள்வது தொடர்பாகவும் நிர்வாகிகளிடம் கருத்துகளை கேட்டறிந்து பேசினார். மாவட்ட இளைஞரணி செயலாளர் வீரபாகு, இளைஞர் பாசறை செயலாளர் தனராஜ், அண்ணா தொழிற்சங்கத் தலைவர் ராஜா, சிறுபான்மை அணி செயலாளர் பிரபாகர், மகளிரணி செயலாளர் குருத்தாய் மற்றும் 52 வட்டச் செயலாளர்கள், 6 பகுதி செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டலத்துக்கு உட்பட்ட முத்தையாபுரம், கிருஷ்ணா நகர், தோப்பு தெரு உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள், ஊர் பெரியவர்கள் மற்றும் வியாபாரி களை எஸ்.டி.ஆர். விஜயசீலன் சந்தித்து வாக்கு சேகரித்தார். அவர் பேசும்போது, ‘‘வெற்றி பெற்றவுடன் பொதுமக்களின் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றுவேன். அதிமுக ஆட்சியில் கூட்டுறவு கடன் தள்ளுபடி மூலம் எண்ணற்ற விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள ஆண்டுக்கு 6 இலவச சமையல் எரிவாயு சிலிண்டர், மாதந்தோறும் குடும்ப தலைவிக்கு ரூ.1,500 உதவித்தொகை உள்ளிட்டவை மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் எனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள்” என்றார்.