தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டுமென்றால் மீண்டும் அதிமுக ஆட்சி மலர வேண்டும் என அன்புமணி ராமதாஸ் சோளிங்கர் தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம்சோளிங்கர் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாமக வேட்பாளர் கிருஷ்ணன்போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து சோளிங்கர் பேருந்துநிலையம் அருகே பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று பேசும்போது, ‘‘சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி மக்களை நம்பி போட்டியிடுகிறது. திமுக கூட்டணி கார்ப்பரேட் கம்பெனியை நம்பி போட்டியிடுகிறது. திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு பாது காப்பு இல்லாமல் போய்விடும். ஸ்டாலினின் முதல்வர் கனவு ஒரு நாளும் பலிக்காது.
எனவே, பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டுமென்றால் தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி மலர வேண்டும். அதிமுக தேர்தல் அறிக்கையில் முதல்வர் பழனிசாமி அறிவித்த திட்டங்கள், தேர்தல் வாக்குறுதிகள் பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவுறுத்தலில் பேரில் முதல்வர் அறிவித்துள்ளார். இத்திட்டங்கள் அனைத்தும் அதிமுக ஆட்சிக்கு வந்த உடன் நிறைவேற்றப்படும்.
வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கியதுபோல, அனைத்து பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தமிழக முதல்வர் பழனிசாமியிடம் பாமக சார்பில் ஏற்கெனவே கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்த உடன் இந்த கோரிக்கையும் நிறைவேற்ற பாமக நிறுவனர் ராமதாஸ் முயற்சி எடுப்பார்’’ என்றார்.
அப்போது, அதிமுக, பாமக, தமாக, பாஜக கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.