முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு சொந்த புத்தி இல்லை. அவருக்கு ஸ்டாலின் புத்தி. ஸ்டாலின் சொல்வதை முதல்வர் நிறைவேற்றுகிறார் என்று ஆ.ராசா பேசினார்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் க.ராமசந்திரனை ஆதரித்து திமுக துணைப் பொதுச் செயலாளரும், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா குன்னூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட குன்னூர் மற்றும் கோத்தகிரியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
குன்னூர் மற்றும் கோத்தகிரியில் திமுக ஊழியர்கள் கூட்டம் மாவட்டச் செயலாளர் பா.மு.முபாரக் தலைமையில் நடந்தது. வேட்பாளர் க.ராமசந்திரனை ஆதரித்து ஆ.ராசா கூட்டத்தில் பேசியதாவது:
''முதல்வர் ஜெயலலிதா துணிச்சல்காரர். அவர் இருந்தவரை தமிழ்நாடு மாநிலத்தின் உரிமைகளை விட்டுக் கொடுக்கவில்லை. ஜெயலலிதா இருந்தவரை தமிழ்நாட்டில் நீட் தேர்வு வரவில்லை. ஜிஎஸ்டி அமல்படுத்தப்படவில்லை. உதய் மின் திட்டம் கொண்டுவரப்படவில்லை. தமிழ்நாடு மாநிலத்தின் உரிமைகளை மத்திய அரசுக்கு விட்டுக் கொடுக்காமல் துணிச்சலாகச் செயல்பட்டவர் ஜெயலலிதா.
அதனால்தான் பிரதமராக இருந்த மோடி போயஸ் கார்டனுக்குச் சென்று ஜெயலலிதாவை நேரில் பார்த்தார்.
ஜெயலலிதாவின் ஆட்சியை நடத்துகிறோம் என்று கூறும் எடப்பாடி பழனிச்சாமி மாநில உரிமைகளை விட்டுக் கொடுத்து மத்திய அரசின் காலடியில் கிடக்கும் அவல நிலை உள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு சொந்த புத்தி இல்லை. அவருக்கு ஸ்டாலின் புத்தி. ஸ்டாலின் சொல்வதை முதல்வர் நிறைவேற்றுகிறார்.
தற்போது, முதல்வர் திமுக பாஜகவுடன் கூட்டணி வைக்கவில்லையா எனக் கேள்வி எழுப்பி வருகிறார். திமுக அன்றைய அரசியல் சூழல் காரணமாக பாஜகவோடு கூட்டணி வைக்க நேர்ந்தது. ஆனால், குறைந்தபட்ச செயல் திட்டம் என்ற நிபந்தனையோடு கூட்டணி வைத்தது.
பாஜக உருவாக்கப்பட்டதற்கான முக்கிய 3 நோக்கங்களான ராமர் கோயில் கட்டுவது, காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வது மற்றும் பொது சிவில் சட்டம் ஆகியவை திமுக கூட்டணி இருந்தவரை நிறைவேற்றப்படவில்லை. தற்போது ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு விட்டது.
திமுக 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத நிலையில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றுவோம் என தேர்தல் வாக்குறுதிகளை அளிக்கிறோம். அதிமுக 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து விட்டு, தற்போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றுவோம் என பல வாக்குறுதிகளை அளிக்கின்றனர்.
திமுக ஆட்சிக்கு வர தொண்டர்கள் கடுமையாக உழைத்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்''.
இவ்வாறு ஆ.ராசா பேசினார்.