செங்கம் அருகே எட்டுவழிச் சாலை திட்டத்தை எதிர்த்து முதல்வர் பழனிசாமிக்கு எதிராக இன்று கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடைபெற்றது.
சென்னை – சேலம் இடையே ரூ.10 ஆயிரம் கோடியில் எட்டுவழிச் சாலை திட்டத்தை அமல்படுத்த மத்திய, மாநில அரசுகள் முனைப்பு காட்டி வருகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவண்ணாமலை உட்பட 5 மாவட்ட விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதல்வர் பழனிசாமிக்கு எதிராக கருப்புக் கொடி காட்டப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் இருந்து செங்கத்துக்கு பிரச்சாரம் செய்ய முதல்வர் பழனிசாமி ஞாயிற்றுகிழமை மாலை சென்றுள்ளார். அப்போது, செங்கம் அருகே உள்ள மண்மலை கிராமத்தில் மறைந்திருந்த விவசாயிகள் சிலர், கருப்புக் கொடி காட்டியுள்ளனர். அவர்கள், எட்டுவழிச் சாலை திட்டத்தை எதிர்த்தும், முதல்வர் பழனிசாமிக்கு எதிராகவும் கண்டன முழக்கங்கள் எழுப்பினர். இதையறிந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் சென்றதும், கருப்புக் கொடி காட்டியவர்கள் தப்பித்துச் சென்றுவிட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல்வர் பிரச்சாரம் செய்யும் இடங்களில் பொதுமக்களிடம் போலீஸார் கெடுபிடி செய்துள்ளனர். கடைகளை மூட வேண்டும், மக்கள் நடமாடக் கூடாது, வாகனங்கள் இயக்கக்கூடாது எனப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தனர். அப்படி இருந்தும், கருப்புக் கொடி காட்டும் விவசாயிகள் திட்டத்தை முன்கூட்டியே கண்டறியாமல் உளவுத் துறையினர் கோட்டை விட்டுள்ளனர். இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறையினர், அங்கிருந்த சிலரைப் பிடித்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.