தமிழகம்

பாஜக குற்றப்பத்திரிக்கை கையேடு உண்மையாக இருந்தால் கைது செய்ய வேண்டியது கிரண்பேடியைதான்: எம்.பி. வைத்திலிங்கம்

செ. ஞானபிரகாஷ்

பாஜக தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிக்கை கையேடு உண்மையாக இருந்தால் முதலில் கிரண்பேடியைதான் கைது செய்ய வேண்டும் என்று எம்பி வைத்திலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு செயல்பாடுகளை விமர்சித்து குற்றப்பத்திரிக்கை என்ற தலைப்பில் 8 பக்க கையேட்டை பாஜக வெளியிட்டுள்ளது. அதில் பல்வேறு ஊழல்களையும் பட்டியலிட்டுள்ளனர்.

இதுபற்றி காங்கிரஸ் அலுவலகத்தில் எம்பி வைத்திலிங்கம் இன்று கூறியதாவது:

"கடந்த அரசு செயல்பாடு பற்றி குற்றப்பத்திரிக்கையை பாஜக வெளியிட்டுள்ளது. இதில் முன்பே குற்றவாளி என்பதால்தான் கிரண்பேடி பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். புதுச்சேரியில் அரசு செயலர்கள், அரசு நிர்வாகம் மத்திய உள்துறையின் கீழ் உள்ளது. நிதி விஷயத்தில் தவறு நடந்திருந்தால் நிதித்துறை செயலர், தலைமைச்செயலர் ஆகியோரைதான் முதலில் வீட்டுக்கு அனுப்ப வேண்டும். அதை மத்திய உள்துறை செய்யாத காரணம் என்னவென்றால், இங்கு குற்றமே இல்லை. எதுவுமே நடக்காமல் எப்படி குற்றம் நடக்கும்.

புதுச்சேரியில் கடந்த ஐந்தாண்டு ஒட்டுமொத்த பட்ஜெட்டை கூட்டினாலும் ரூ. 15 ஆயிரம் கோடி வராது. நிதியை முதல்வராக எடுத்து செலவுப்பண்ண முடியாது. காசோலை தரும் அதிகாரம் முதல்வருக்கு இல்லை. உண்மையில் புதுச்சேரியில் எந்த அதிகாரமும் முதல்வருக்கு கிடைாது. முதல்வர் கையெழுத்து போட்டால் எந்த வங்கியில் பணம் எடுக்க முடியும். நிதி விஷயத்தில் புதுச்சேரியில் நிதித்துறை, தலைமைச்செயலரே பொறுப்பு. இங்கு அபிவிருத்தி இல்லாததற்கு காரணம் மோடி அரசு. கிரண்பேடியை வைத்து தேர்தலை சந்திக்க முடியாது என்பதால்தான் அவரை பாஜக அரசு நீக்கியது.

கிரண்பேடி நீக்கத்துக்கு காரணம் இன்னும் மத்திய அரசு சொல்லவில்லை. அரிசி போடக்கூடாது என்று சொன்னது கிரண்பேடிதான். அவர் சொல்வதுதான் சரி என்று உள்துறை தெரிவித்தது. பாஜகவின் குற்றப்பத்திரிக்கை உண்மையாக இருந்தால் முதலில் கிரண்பேடியை கைது செய்யுங்கள், தலைமைச்செயலர் நிதித்துறை செயலர் ஆகியோரை மாற்றிவிட்டு விசாரணை வையுங்கள். " என்று குறிப்பிட்டார்.

SCROLL FOR NEXT