நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்ட மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் 
தமிழகம்

காய்கறிகளை போல் சிறந்த வேட்பாளர்களை தேர்ந்தெடுங்கள்: மக்கள் நீதி மய்யம் பிரச்சாரம்

பெ.ஜேம்ஸ்குமார்

சிறந்த காய்கறிகளை தேர்வு செய்வது போல் சிறந்த வேட்பாளர்களை தேர்ந்தெடுங்கள் என தாம்பரம், பல்லாவரம் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

தாம்பரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் சிவ இளங்கோவும், பல்லாவரம் தொகுதிக்கு செந்தில் ஆறுமுகம் ஆகியோர் போட்டியிடுகின்றனர். நீர்நிலைகளை தூர்வாரி சீரமைக்கப்படும். தாம்பரம் மற்றும் பல்லாவரம் நகராட்சிகள் மாநகராட்சி ஆக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை பொதுமக்களுக்கு தெரிவித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சிறந்த காய்கறிகளை தேர்வு செய்து அதை மாலையாக கோர்த்துக்கொண்டு வீதி வீதியாக பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, கடைக்குச் சென்று சிறந்த காய்கறிகளை தேர்வு செய்து நாம் பயன்படுத்துகிறோம். அதுபோல், உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு கானும் சிறந்த வேட்பாளர்களை தேர்வு செய்து வாக்களியுங்கள் என நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இதுகுறித்து வேட்பாளர்கள் கூறியதாவது:

பொதுமக்களுக்கு சிறந்த சேவையை வழங்க வேண்டும் என்பதற்காக தேர்தலில் போட்டியிடுகிறோம். தாம்பரம், பல்லாவரம் பகுதியில் உள்ள ஏரிகள் அனைத்தும் கழிவுநீரால் மாசுபட்டு கிடக்கிறது. அனைத்தையும் சீரமைத்து பாதுகாப்போம். தாம்பரம் மற்றும் பல்லாவரம் ஆகிய நகராட்சிகளை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும். அரசு அலுவலகங்களில் லஞ்ச லாவண்யம் அற்ற தூய்மையான நிர்வாகம் வழங்கப்படும். பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் எங்களை தொடர்பு கொள்ளலாம். நாம் வீட்டிற்கு தேவையான காய்கறிகளை கடையில் சென்று ஒவ்வொன்றாக தேர்வு செய்து சிறந்தவற்றை வீட்டுக்கு கொண்டு சென்று சமைத்து உண்கிறோம். அதேபோல் சிறந்த வேட்பாளர்களை பொதுமக்கள் தெரிவு செய்ய வேண்டும்.

நாங்கள் தேர்வு செய்யப்பட்டால் என்ன செய்வோம் என்பது பொதுமக்களிடம் தெளிவாக விளக்குவதற்காகவே இந்த நூதன பிரசாரத்தில் ஈடுபட்டோம். ஆகவே, பொதுமக்கள் தங்களுக்கு சிறந்தது எதுவோ அதனை தேர்வு செய்ய வேண்டும். நாம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக சிறந்தவற்றை தேர்வு செய்கிறோம். அதேபோல் நாடும், மக்களும் ஆரோக்கியமாக வாழ வேண்டுமென்றால் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் என பிரச்சாரம் செய்து வருகிறோம். இந்த பிரச்சாரத்தில் பொதுமக்கள் எங்களுக்கு நிறைய பதிலை தெரிவித்துள்ளனர். எனவே, பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT