தமிழகம்

அதிமுக அடகுவைத்த தமிழகத்தை மீட்டெடுப்போம்: திருப்பூர் பிரச்சாரத்தில் கனிமொழி எம்.பி. உறுதி

செய்திப்பிரிவு

அதிமுக அடகுவைத்த தமிழகத்தை மீட்டெடுப்போம் என்று திமுக மகளிரணிச் செயலர் கனிமொழி எம்.பி. கூறினார்.

திருப்பூர் மாவட்டம் செங்கப்பள்ளியில் நேற்று நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில், திமுக கூட்டணி சார்பில் பெருந்துறை தொகுதியில் போட்டியிடும் கொமதேக வேட்பாளர் கே.கே.சி.பாலுவை ஆதரித்து கனிமொழி பேசியதாவது:

மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக, தமிழர்களுக்கு துரோகம் இழைக்கிறது. பாஜகவின் பினாமியாகத்தான் அதிமுக அரசு செயல்படுகிறது. தமிழ் மண்ணின் மொழி, அடையாளம், சுயமரியாதை, உரிமைகளை, பாஜகவிடம் அடகுவைத்துவிட்டது அதிமுக. இவ்வாறு அடகு வைக்கப்பட்ட தமிழகத்தை நாம் மீட்டெடுப்போம்.

விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை ஆதரித்தது அதிமுக. ஆனால், தற்போது தேர்தலுக்காக, வேளாண் சட்டங்களை ரத்து செய்ய பாடுபடுவோம் என்கிறார் முதல்வர் கே.பழனிசாமி.

அதேபோல, சிறுபான்மை யினருக்கு எதிரான சிஏஏ சட்டத்தை அதிமுகவினர் ஆதரித்தனர். இப்போது, அந்த சட்டத்தை ரத்துசெய்ய முயற்சி செய்வோம் என்கின்றனர்.

இதையெல்லாம் நம்பி, தமிழக மக்கள் ஏமாற தயாராக இல்லை. யார் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு காப்பாற்றப்படும் என்பதில் மக்கள் தெளிவாக உள்ளனர்.

தமிழகத்தில் 23 லட்சம் பேர் வேலைவாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். திமுக ஆட்சிக்கு வந்ததும் 3.50 லட்சம் காலி பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்பட்டு, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும். ஜெயலலிதா மரணத்தில் இருக்கும் மர்மம் வெளிக்கொணரப்படும்.

பெருந்துறையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், ஊத்துக்குளியில் குளிர்பதனக் கிடங்கு அமைக்கப்படும். உள்ளாட்சிகளில் வசூலிக்கப்படும் குப்பை வரி நீக்கப்படும். சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கநிலம் வழங்கியவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும். விசைத்தறிதொழிலில் ஏற்பட்டுள்ள தேக்கநிலையை சரி செய்ய, மத்திய அரசுடன் பேசி, நடவடிக்கை எடுக்கப் படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதேபோல, தாராபுரத்தில் திமுக வேட்பாளர் கயல்விழியை ஆதரித்து நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட கனிமொழி, "குடியுரிமைச் சட்டம் மூலம் சிறுபான்மையினரை வெளியேற்ற நினைக்கிறது பாஜக அரசு. நீட் தேர்வு மூலம் சாதாரண மக்களின் உயர்கல்வி கனவைப் பறிக்கிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். திமுக ஆட்சி அமைந்ததும், பெண்கள் கட்டணமின்றி நகரப் பேருந்துகளில் பயணிக்கலாம்" என்றார்.

SCROLL FOR NEXT