சென்னையில் அடுத்த கட்டமாக வீட்டு வேலை செய்பவர்கள், ஆட்டோ,வாடகை கார் ஓட்டுநர்கள் மற்றும்உணவக ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு கரோனா தடுப்பூசி போடதிட்டமிட்டிருப்பதாக மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி சார்பில், சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு உள் விளையாட்டரங்களில் மாபெரும் கரோனா தடுப்பூசி போடும்முகாம் நேற்று நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் முகாமை தொடங்கிவைத்து பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கரோனா தடுப்பு நடவடிக்கையாக நேற்று வரை 4 லட்சத்து 50 ஆயிரம்பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பணிக்கு செல்வோர் நலன் கருதி, மாபெரும் தடுப்பூசி போடும் முகாம் நேரு உள் விளையாட்டரங்கில் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இதில் மூத்த மருத்துவர்கள் தலைமையில் 10 மருத்துவக் குழுக்கள் உள்ளன. இங்கு ஒரு நாளில் சுமார் 3,500 பேருக்கு தடுப்பூசி போட முடியும். இதுபோன்ற மாபெரும் தடுப்பூசி போடும் முகாமை வாரந்தோறும் நடத்த திட்டமிட்டிருக்கிறோம். இதில்கிடைக்கும் படிப்பினை அடிப்படையில், நந்தம்பாக்கம் வர்த்தக மையம் மற்றும் ஒரு இடத்திலும் தடுப்பூசி போடும் முகாம்களை திறக்க இருக்கிறோம்.
தற்போது தினமும் 30 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடுகிறோம். தினமும் 60 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடும் வசதிகள் மாநகராட்சி வசம் உள்ளது.
அடுத்தகட்டமாக அதிக அளவில் மக்களை சந்திக்க வாய்ப்புள்ள வீட்டு வேலை செய்பவர்கள், தனியார் செக்யூரிட்டி ஊழியர்கள், உணவக ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் ஆட்டோ மற்றும் வாடகை கார்ஓட்டுநர்கள் உள்ளிட்டோருக்கும் தடுப்பூசி போட திட்டமிட்டிருக்கிறோம்.தடுப்பூசி போடுவோர் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, தனியார் மருத்துவர்கள் உதவியையும் நாட இருக்கிறோம். தற்போது போதிய அளவு தடுப்பூசி மருந்து இருப்பில் உள்ளது. இவ்வாறு அவர்கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி இணை ஆணையர் (கல்வி) பி.என்.தர், துணை ஆணையர்கள் ஆல்பிஜான் வர்கீஸ் (சுகாதாரம்), ஜெ.மேகநாதரெட்டி (வருவாய் மற்றும் நிதி), மாநகர நல அதிகாரி எம்.ஜெகதீசன், மருத்துவ அதிகாரி எம்.எஸ்.ஹேமலதா ஆகியோர் கலந்துகொண்டனர்.