தேர்தல் பணியால் வட்டாட்சியர் அலுவலகம் வெறிச்சோடி காணப்படுவதால், சான்று பெற முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் ஏப். 6-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தேர்தல் பணிகளில் அனைத்து துறை அரசு ஊழியர்களும் ஈடுபட்டுள்ளனர். இதில் அனைத்து துறைஅதிகாரிகளும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்தல் பணிவுடன் வழக்கமாகச் செய்யும் பணிகளையும் கவனிக்க வேண்டும்.
ஆனால், வருவாய்த் துறையில் மட்டும் தேர்தல் பணியை மட்டும் கவனிக்கின்றனர். மற்ற பணிகளை அவர்கள் கவனிப்பதில்லை. கேட்டால் தேர்தல் பணி அதனால் எங்களால் வேறு எந்த பணியும் செய்ய முடியாது. தேர்தல் முடிந்தவுடன் வாருங்கள் என பொதுமக்களை திருப்பி அனுப்புகின்றனர். இதனால்பொதுமக்கள் பல்வேறு வகையான சான்றுகளைப் பெற முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே, அந்தந்த மாவட்ட நிர்வாகம் தேர்தல் பணிவுடன் வழக்கமாக நடைபெறும் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்த வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் சிலர் கூறியதாவது: அனைத்து துறை அதிகாரிகளும் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்தல் பணிகள் மற்றும் வழக்கமான துறையில் நடைபெறும் பணிகளை கவனித்து வருகின்றனர். தேர்தல் காலம் என்பதால் வழக்கமான பணியை கவனிப்பது சற்று கடினம்தான். ஏற்கெனவே அரசு அலுவலர்கள் முழுமூச்சுடன் பணிகளை செய்வதில்லை. தற்போது தேர்தல் நேரம் என்பதால், வழக்கமாகச் செய்ய வேண்டிய பணிகளை செய்யாமல் தேர்தல் பணிஎன குறிப்பிட்டு வெளியில் சென்றுவிடுகின்றனர். இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.
எனவே தேர்தல் ஆணையம் இதில் தலையிட்டு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியருக்கு, வழக்கமான பணிகளையும் கவனிக்க வேண்டும் என அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.